லாட்டரி அதிபர் மார்டினுக்கு சொந்தமான இடங்களில் 2வது நாளாக தொடரும் சோதனை
தமிழ்நாடு மாநிலத்தில் லாட்டரி டிக்கெட்டுகள் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் கேரளா, சிக்கிம், மேற்கு வங்காளம் உள்ளிட்ட பகுதிகளில், மாநில அரசு அனுமதிக்குட்பட்டு லாட்டரி டிக்கெட்டுக்கள் விற்பனை செய்யப்படுகிறது. இதில் கோவையிலுள்ள மார்ட்டின் என்னும் தொழிலதிபர் முக்கிய பங்கு வகிப்பதாக கூறப்படுகிறது. 2009-10ம்ஆண்டில் மார்ட்டின் லாட்டரி டிக்கெட்டுகளின் விதிமுறைகளை மீறி ரூ.910 கோடி வருவாய் ஈட்டியதாக புகார்கள் எழுந்தது. இப்புகாரின் பேரில் அமலாக்கத்துறை கடந்த 2019ம்ஆண்டு மார்ட்டினுக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தியது. அதில் அவர் சட்டவிரோத பணபரிமாற்றத்தில் ஈடுபட்டது கண்டறியப்பட்ட நிலையில் அவர்மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டது. இதனிடையே கடந்த மே மாதம் மீண்டும் மார்ட்டினின் வீடு, அலுவலகம் என அவருக்கு சம்பந்தப்பட்ட அனைத்து இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டது.
2 கார்களில் 11 பேர் கொண்ட குழு கேரளாவில் இருந்து வருகை
இந்த சோதனையில் ரூ.457 கோடி மதிப்புள்ள அவரது அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் முடக்கப்பட்டது என்று செய்திகள் வெளியானது. இதற்கிடையே நேற்று(அக்.,12) கொச்சின் அமலாக்கத்துறை கோவையிலுள்ள அவரது வீடு உள்ளிட்ட 3 இடங்களில் மீண்டும் சோதனை செய்ததாக தகவல்கள் தெரிவிக்கிறது. மார்ட்டினின் மருமகன் ஆதவ் அர்ஜுன், சென்னை போயஸ் கார்டனில் வசித்துவரும் நிலையில், அவரது வீடு, அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்தப்படுகிறது. 2வது நாளாக இன்றும்(அக்.,13) நடக்கும் இந்த சோதனையினை மேற்கொள்ள நேற்று கேரளாவில் இருந்து 2 கார்களில், 11 பேர் கொண்ட வருமான வரித்துறை அதிகாரிகள் சென்னை வந்துள்ளனர். இந்த சோதனைகள் முழுமையாக நிறைவடைந்த பின்னரே, கைப்பற்றப்பட்டுள்ள ஆவணங்கள் குறித்த விவரங்கள் வெளியிடப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.