'தீவிரவாத தாக்குதல் நடத்துவோம்': மும்பை காவல்துறைக்கு மிரட்டல்
தன் காதலனை தேடி இந்தியாவுக்குள் நுழைந்த பாகிஸ்தான் பெண் சீமா ஹைதர் தனது நாட்டிற்கு திரும்பவில்லை என்றால் 26/11 மும்பை தீவிரவாத தாக்குதல் போல இன்னொரு தாக்குதலை நடத்துவோம் என்று மும்பை காவல்துறையின் போக்குவரத்து கட்டுப்பாட்டு அறைக்கு அடையாளம் தெரியாத நபர் ஒருவரிடமிருந்து அழைப்பு வந்துள்ளது. இந்த தகவலை செய்தியாளர்களிடம் தெரிவித்த மும்பை காவல்துறை அதிகாரி, இந்த மிரட்டல் அழைப்பு ஜூலை 12ஆம் தேதி வந்ததாக கூறி இருக்கிறார். உருது மொழியில் பேசி மிரட்டல் விடுத்த அந்த மர்ம நபர், மும்பையில் நவம்பர் 26, 2008 அன்று நடந்தது போன்ற பயங்கர தாக்குதல் நடக்கும் என்றும், அதற்கு உத்தரபிரதேச அரசுதான் பொறுப்பேற்க வேண்டும் என்றும் கூறி இருக்கிறார்.
காதலரை தேடி இந்தியாவிற்குள் சட்டவிரோதமாக நுழைந்த பாகிஸ்தானிய பெண்
இந்த மர்ம அழைப்பு ஒரு செயலி மூலம் வந்திருக்கிறது என்றும் அதை ட்ராக் செய்ய காவல்துறையினர் முயற்சித்து வருகின்றனர் என்றும் அந்த போலீஸ் அதிகாரி கூறியுள்ளார். பாகிஸ்தானைச் சேர்ந்த சீமா ஹைதர், கிரேட்டர் நொய்டாவில் வசிக்கும் தனது காதலரான சச்சின் மீனாவை திருமணம் செய்வதற்காக சமீபத்தில் இந்தியாவிற்குள் சட்டவிரோதமாக நுழைந்தார். ஆன்லைன் கேம்மான PUBG விளையாடும்போது இருவரும் தற்செயலாக ஆன்லைனில் சந்தித்திருக்கின்றனர். இந்தியாவிற்குள் சட்டவிரோதமாக தங்கி இருந்ததற்காக சீமா ஹைதரையும்(30), சச்சின் மீனாவையும்(25) போலீஸார் கைது செய்தனர். ஆனால், உத்தரபிரதேசத்தின் கிரேட்டர் நொய்டாவில் உள்ள நீதிமன்றம் அவர்களுக்கு கடந்த வாரம் ஜாமீன் வழங்கியது.