
டெல்லியில் ஜிம்மில் உடற்பயிற்சி செய்தபோது மின்சாரம் தாக்கி இளைஞர் பலி
செய்தி முன்னோட்டம்
டெல்லி ரோஹினி பகுதியில் உள்ள ஜிம்மில், டிரெட்மில்லில் ஓடும் போது மின்சாரம் தாக்கியதில், 24 வயது இளைஞர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
உயிரிழந்தவர், ரோஹினி செக்டார் 19 இல் வசிக்கும் சக்சம் ப்ருதி என்றும், செக்டார் 15 இல் உள்ள ஜிம்ப்ளக்ஸ் ஃபிட்னஸ் ஜிம்மில் உடற்பயிற்சி செய்வதை அவர் வாடிக்கையாக கொண்டிருந்தார்.
பி.டெக் பட்டதாரியான சக்சம் ப்ருதி, குருகிராமில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார்.
முன்னதாக, செவ்வாய்க்கிழமை (ஜூலை 18) மாலை ஜிம்மில் டிரெட்மில்லில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த போது சக்சம் ப்ருதி சரிந்து விழுந்தார்.
இதையடுத்து ரோஹினி செக்டார் 6 இல் உள்ள, பாபா சாகேப் அம்பேத்கர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர், பின்னர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.
police arrested gym manager
ஜிம் மேலாளரை கைது செய்தது காவல்துறை
பாபா சாகேப் அம்பேத்கர் மருத்துவமனை, சக்சம் ப்ருதி இறந்தது குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்த நிலையில், காவல்துறை சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தது.
பிரேத பரிசோதனையில், மின்சாரம் தாக்கியதே சக்சம் ப்ருதி மரணத்திற்கு காரணம் என உறுதி செய்யப்பட்டதாக ரோஹினி சரக காவல்துறை துணை ஆணையர், குரிக்பால் சிங் சித்து தெரிவித்தார்.
இதையடுத்து, காவல்துறை விசாரணையில் ஜிம்மில் இயந்திரங்களை கையாள்வதில் அலட்சியமாக நடந்து கொண்டது தான் விபத்திற்கு காரணம் என தெரியவந்ததால், ஜிம் மேலாளர், அனுபவ் துகலை கைது செய்துள்ளது.
மேலும் விசாரணை நடந்து வருகிறது.