பள்ளிக்கல்வித்துறையில் பட்டதாரி ஆசிரியர் பணிக்கான 2,222 காலியிடங்கள் - கூடுதலாக 1,000 பணியிடங்கள் சேர்க்க முடிவு
தமிழ்நாடு அரசு பள்ளிகளில் ஆசிரியருக்கான பணிக்கு 15,000 காலியிடங்கள் உள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கிறது. இதன் முதற்கட்டமாக பட்டதாரி ஆசிரியர்களுக்கான 2,222 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டி தேர்வு குறித்த அறிவிப்பு நேற்று(அக்.,25) வெளியிடப்பட்டது. இந்நிலையில் மேலும் 1000 ஆசிரியருக்கான காலி பணியிடங்களை சேர்க்கவுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன. எனவே இதுகுறித்த அதிகாரபூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்றும் கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து பட்டதாரி ஆசிரியர்களுக்கான காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் பி.ஏ.,பிஎஸ்ஸி'ல் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும், அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழங்களில் பி.எட் பட்டம் பெற்றிருக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடங்களுக்கான போட்டி தேர்வு விரைவில் அறிவிக்கப்படும்
மேலும் இந்த பணியிடத்திற்கு கட்டாய தமிழ்மொழி தகுதி தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, எழுத்து தேர்வு, உள்ளிட்டவைகளின் அடிப்படையில் இறுதி மதிப்பெண் பட்டியல் தயார் செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சான்றிதழ் சரிபார்ப்பின் பொழுது ஆசிரியர் தகுதி தேர்வுக்கான 2ம் தாளில் தேர்ச்சி பெறுவோருக்கு வெயிட்டேஜ் அடிப்படையில் மதிப்பெண் அளிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. வரும் 2024ம் ஆண்டு ஜனவரி 7ம் தேதி நடைபெறவுள்ள இந்த போட்டி தேர்விற்கு விண்ணப்பிக்க கடைசி தேதி நவம்பர் மாதம் 30ம் தேதி என்றும் கூறப்பட்டுள்ளது. இதற்கிடையே, இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டி தேர்வு குறித்த அறிவிப்பு விரைவில் தனியே அறிவிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.