இன்று தொடங்குகிறது பாஜகவுக்கு எதிரான மாபெரும் எதிர்க்கட்சிகள் கூட்டம்
இன்றும் நாளையும் பெங்களூரில் நடைபெற இருக்கும் எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் 24 எதிர்க்கட்சிகளின் முக்கியத் தலைவர்கள் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வரவிருக்கும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் மற்றும் 2024ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கான திட்டத்தை வகுக்க இந்த கூட்டம் கூட்டப்பட்டுள்ளது. எதிர்க்கட்சித் தலைவர்கள் தங்களுக்குள் ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடுகளை களைவது குறித்தும், அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் ஐக்கிய முன்னணியை உருவாக்குவது குறித்தும் பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ்(TMC), ஆம் ஆத்மி கட்சி(AAP) உள்ளிட்ட பாஜகவுக்கு எதிரான கட்சிகளின் புதிய கூட்டணி இனி ஐக்கிய முற்போக்குக் கூட்டணி(UPA) என்று அழைக்கப்படாது.
ஆம் ஆத்மி கட்சியும் எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் கலந்து கொள்ள இருப்பதாக அறிவித்தது
நாளை பெங்களூரில் 24 கட்சிகள் பங்கேற்கும் மெகா எதிர்க்கட்சி கூட்டத்தில் புதிய பெயர் முடிவு செய்யப்படும் என்று வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. பல நாட்கள் ஆலோசித்த பிறகு, தாங்களும் கூட்டத்தில் பங்கேற் இருப்பதாக ஆம் ஆத்மி கட்சி நேற்று அறிவித்தது. டெல்லி அவசர சட்ட விவகாரத்தில் ஆம் ஆத்மிக்கு ஆதரவு தெரிவிக்க இருப்பதாக காங்கிரஸ் அறிவித்ததை அடுத்து, ஆம் ஆத்மி கட்சியும் எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் கலந்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியது. இந்த கூட்டத்தில் சோனியா காந்தி, மம்தா-பானர்ஜி, சரத்-பவார், அரவிந்த்-கெஜ்ரிவால், மு.க.ஸ்டாலின், நிதிஷ்குமார், ஹேமந்த் சோரன் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொள்கின்றனர். கே.சந்திரசேகர் ராவ், ஜெகன் மோகன் ரெட்டி, சந்திரபாபு நாயுடு, நவீன் பட்நாயக் ஆகிய எதிர்க்கட்சி தலைவர்கள் இதில் கலந்துகொள்ள போவதில்லை.