ஆம் ஆத்மியை ஆதரித்தது காங்கிரஸ்: எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் கலந்து கொள்கிறார் அரவிந்த் கெஜ்ரிவால்
பெரும் எதிர்க்கட்சிகள் கூட்டம் நாளை பெங்களூரில் வைத்து நடைபெற உள்ள நிலையில், டெல்லி அவசரச் சட்ட பிரச்சனையில் ஆம் ஆத்மி கட்சிக்கு ஆதரவளிப்பதாக காங்கிரஸ் அறிவித்துள்ளது. 2024ஆம் ஆண்டு பொது தேர்தல் நடைபெற இருப்பதால், பாஜகவை எப்படியாவது தோற்கடித்துவிட வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் இணைந்து தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. ஆனால், காங்கிரஸ், ஆம் ஆத்மி போன்ற எதிர்க்கட்சிகளுக்கு இடையில் கருத்து வேறுபாடுகள் நிலவி வந்தது. இதனால், ஆம்-ஆத்மி, எதிர்க்கட்சிகள் கூட்டத்தை புறக்கணிக்க போவதாக கூறி வந்த நிலையில், ஆம் ஆத்மி கட்சிக்கு ஆதரவளிக்கும் விதமாக, நாடாளுமன்றத்தில் டெல்லி அவசரச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்போம் என்று காங்கிரஸ் தெரிவித்துள்ளது. இதனையடுத்து, ஆம் ஆத்மி கட்சியும் நாளை நடைபெற இருக்கும் எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் கலந்துகொள்ளப்போவதாக அறிவித்துள்ளது.
எதற்காக டெல்லி அவசரச் சட்டத்திற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவிக்கின்றன?
டெல்லி அரசாங்கம், ஆம் ஆத்மி தலைவரான அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் இயங்கி வருகிறது. டெல்லி அரசாங்கத்திற்கும் அதன் ஆளுநர் விகே சக்சேனாவுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் நிலவி வருகிறது. இந்நிலையில், அரசாங்க அதிகாரிகளை நியமிப்பதற்கும் இடமாற்றுவதற்கும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்திற்கே அதிகாரம் உள்ளது என்று உச்ச நீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பளித்தது. இந்த உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி கட்சிக்கு சார்பாகவும், டெல்லியின் துணைநிலை ஆளுநரும் மத்திய அரசின் பிரதிநிதியுமான வி.கே.சக்சேனாவுக்கு எதிராகவும் வந்திருந்தது. இது நடந்து சில நாட்களுக்குள், ஒரு அவசர சட்டத்தை கொண்டு வந்த மத்திய-அரசு, அரசாங்க அதிகாரிகளை நியமிப்பதற்கும் இடமாற்றுவதற்கும் ஆளுநருக்கு அதிகாரத்தை வழங்கியது. இதனால், மக்களால் தேர்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தின் அதிகாரம் பறிக்கப்படுவதாக எதிர்க்கட்சிகள் வாதாடிவருகின்றன.