நவம்பர் 4,5ஆம் தேதிகளில் வாக்காளர்களுக்கான சிறப்பு முகாம்: தேர்தல் அதிகாரி அறிவிப்பு
2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடக்கவுள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகளை செய்வதில் இந்திய தேர்தல் ஆணையம் தீவிரம் காட்டி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில் தமிழ்நாடு மாவட்டத்தில் இந்த தேர்தலையொட்டி அரசியல் கட்சிகள் பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். வாக்குச்சாவடி பொறுப்பாளர்களை அமைத்து நடக்கவிருக்கும் தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனை செய்தல், பூத் கமிட்டி அமைத்தல் போன்ற பணிகள் துவங்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அரசு சார்பில் வாக்காளர்கள் பெயர்களை சரிபார்த்தல், பெயர்களை நீக்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது என்று தெரிகிறது. அதன்படி வரும் 27ம் தேதி மாநிலம் முழுவதும் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியாகும் என்று கூறப்பட்டுள்ளது.
சென்னை தலைமை செயலகத்தில் ஆலோசனை கூட்டம்
இந்நிலையில், அங்கீகாரம் பெற்ற தேசிய மற்றும் மாநில கட்சி பிரதிநிதிகளுடன் தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு வரும் 25ம் தேதி சென்னை தலைமை செயலகத்தில் ஆலோசனை நடத்தவுள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அடுத்த மாதம் 4,5ம் தேதிகளிலும் 18,19 தேதிகளிலும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, நீக்கம், திருத்தம் போன்ற பணிகளை மேற்கொள்ள சிறப்பு முகாம்கள் நடத்தப்படவுள்ளது என்றும் அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது. முன்னதாக இந்தாண்டு இறுதியில் சத்தீஸ்கர், ராஜஸ்தான், தெலுங்கானா, மத்திய பிரதேசம், மிசோரம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடக்கவுள்ளது என்று அறிவிக்கப்பட்டு அதற்கான தேதிகளும் தெரிவிக்கப்பட்டது. இத்தேர்தல் நடக்கவுள்ள நாடாளுமன்ற தேர்தலின் ஓர் முன்னோட்டமாக தற்போதைய அரசியல் சூழலில் பார்க்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.