20 லட்சம் லஞ்சம் வாங்கிய விவகாரம்: மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் சோதனை நிறைவு
அமலாக்கத்துறை அதிகாரி 20 லட்சம் லஞ்சம் வாங்கிய விவகாரம் தொடர்பாக, மதுரை அமலாக்க அலுவலகத்தில் நடைபெற்று வந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை 13 மணிநேரத்திற்கு பிறகு இன்று காலை முடிவடைந்தது. திண்டுக்கல் அரசு ஊழியரிடம் ரூ.20 லட்சம் லஞ்சம் வாங்கிய குற்றம்சாட்டின் பேரில் அமலாக்க இயக்குனரக அதிகாரியான அங்கித் திவாரி, மாநில ஊழல் தடுப்பு பிரிவினரால் நேற்று கைது செய்யப்பட்டார். அவர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, மதுரையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் திண்டுக்கல் மாவட்ட ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸார் சோதனை நடத்தினர். அங்கித் திவாரியின் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது. இந்நிலையில், நேற்று மாலை 6 மணிக்கு தொடங்கிய சோதனைகள் 13 மணிநேரத்திற்கு பிறகு இன்று காலை முடிவடைந்துள்ளது.
பலரை பிளாக்மெயில் செய்து பணம் பறித்த அரசாங்க அதிகாரி
தற்போதைக்கு அங்கித் திவாரி டிசம்பர் 15ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். மதுரை மற்றும் சென்னையைச் சேர்ந்த பல அதிகாரிகளுக்கு இந்த விவகாரத்தில் தொடர்பு இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன. அங்கித் திவாரி, பலரை பிளாக்மெயில் செய்து அவர்களிடமிருந்து பல கோடி ரூபாய் லஞ்சம் வாங்கியதாக கூறப்படுகிறது. அவர் மற்ற அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கும் லஞ்சத்தில் பங்கு கொடுத்தார் என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. சோதனையின் போது, அங்கித் திவாரியிடம் இருந்து சில ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. இந்த வழக்கு தொடர்பாக மதுரை மற்றும் சென்னை அலுவலகங்களில் உள்ள அமலாக்கத்துறை அதிகாரிகளிடமும் சோதனை நடத்தப்படலாம் என்றும் பேசப்படுகிறது.