உயிரிழந்த பென்ஷன்தாரர்களுக்கு தவறுதலாக ரூ.2 கோடி ஓய்வூதியம் வழங்கிய மத்திய அரசு
முதியோர்கள், விதவைகள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு ஓய்வூதியங்களை வழங்கும் மத்திய அரசு திட்டமான தேசிய சமூக உதவித் திட்டத்தை(NSAP) செயல்படுத்தும் போது தவறுதலாக உயிரிழந்த பென்ஷன்தாரர்களுக்கு ரூ.2 கோடி ஓய்வூதியம் வழங்கப்பட்டது கண்டறியப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை செயல்படுத்துவதில் ஏற்பட்ட பல்வேறு முரண்பாடுகளைக் கன்ட்ரோலர் மற்றும் ஆடிட்டர் ஜெனரல்(சிஏஜி) கண்டறிந்துள்ளது . 26 மாநிலங்களில் உள்ள அரசுகள் 2,103 உயிரிழந்த பயனாளிகளுக்கு ஓய்வூதியம் வழங்கியுள்ளது புதிதாக நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. 2,103 பயனாளிகளின் ஓய்வூதியத்திற்காக ரூ. 2 கோடி செல்வழிக்கப்பட்டுள்ளது.
மேற்கு வங்கம்
2017-2021ஆம் ஆண்டுகளில் இந்த தவறுகள் பதிவாகியுள்ளன. NSAP வழிகாட்டுதல்களின்படி, ஒரு பயனாளி இறந்து போனாலோ, இடம்பெயர்ந்தாலோ அல்லது வறுமை கோட்டின் அளவுகோலைத் தாண்டி சம்பாதிக்க தொடங்கினாலோ அவர்களது ஓய்வூதியம் நிறுத்தப்பட வேண்டும். ஆனால், பல்வேறு மாநிலங்களை சேர்ந்த உள்ளாட்சி அமைப்புகள் சரியான நேரத்தில் இறப்புகளைப் பதிவு செய்ய தவறியதால், தற்போது உயிரிழந்தவர்களுக்கு ஓய்வூதியம் அதிகமாக வழங்கப்பட்டுள்ளது. அதிகமான உயிரிழந்தவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கிய மாநிலங்களின் பட்டியலில் மேற்கு வங்கம் முதல் இடத்தில் உள்ளது. மேற்கு வங்கத்தை சேர்ந்த 453 உயிரிழந்த பயனாளிகளுக்கு 83.27 லட்சம் ருபாய் ஓய்வூதியம் வழங்கப்பட்டுள்ளது. மேற்கு வங்கத்தை தொடர்ந்து குஜராத் மற்றும் திரிபுரா ஆகிய மாநிலங்கள் இந்த விஷயத்தில் அதிக தவறுகளை செய்துள்ளன.