ராஜஸ்தானில் மைனர் சிறுமியை பலாத்காரம் செய்து அவளை உயிருடன் எரித்த 2 சகோதரர்களுக்கு மரண தண்டனை
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஒரு 14 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து அவளை நிலக்கரி உலையில் உயிருடன் எரித்து கொலை செய்த இருவருக்கு ராஜஸ்தானின் பில்வாராவில் உள்ள சிறப்பு நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது. நீதிபதி அனில் குப்தா இந்த வழக்கை "அரிதானது " என வகைப்படுத்தினார். கலேப்லியா பழங்குடியினத்தைச் சேர்ந்த கலு மற்றும் கன்ஹா என அடையாளம் காணப்பட்ட சகோதரர்கள் POCSO(பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும்) நீதிமன்றத்தால் சனிக்கிழமை குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டனர். ஆனால். சாட்சியங்களை அழித்ததாக குற்றம் சாட்டப்பட்ட மூன்று பெண்கள் உட்பட ஏழு பேரை அந்த நீதிமன்றம் விடுவித்தது.
கலு மற்றும் கன்ஹா குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டனர்
அவர்களின் விடுதலையை எதிர்த்து ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. விடுவிக்கப்பட்ட மூன்று பெண்களில் இருவர் கலு மற்றும் கன்ஹாவை திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. "கலு மற்றும் கன்ஹா ஆகியோருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. " என்று சிறப்பு அரசு வக்கீல் மஹாவீர் சிங் கிஷ்னாவத் செய்தியாளர்களிடம் கூறினார். சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற வழக்கில் அவர்கள் குற்றவாளிகள் என்பது கடந்த சனிக்கிழமை உறுதியாகியது. இந்த காட்டுமிராண்டித்தனமான குற்றம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 3ம் தேதி நடந்தது. அந்த சிறுமி கால்நடைகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்ற போது பாலியல் வன்கொடுமைக்கு ஆளானார். இது பில்வாரா மாவட்டத்தில் உள்ள கோத்ரி தாலுகாவின் ஷாபுரா பகுதியில் நடந்தது.