வெளிநாட்டை சேர்ந்த இஸ்லாமிய மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய விவகாரம்: 2 பேர் கைது
குஜராத் பல்கலைக்கழகத்தில் நேற்றிரவு ரம்ஜான் தொழுகைக்கு சென்ற வெளிநாட்டு மாணவர்களை தாக்கிய இருவரை அகமதாபாத் போலீசார் இன்று கைது செய்தனர். கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் ஹிதேஷ் மேவாடா மற்றும் பாரத் படேல் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். சட்டவிரோதமாக ஒன்றுகூடல், ஆயுதங்களுடன் சட்டவிரோதமாக ஒன்றுகூடல், கலவரம், மோசடி செய்தல், தானாக முன்வந்து காயப்படுத்துதல், உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துதல், குற்றவியல் அத்துமீறல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் அவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். நேற்றிரவு குஜராத் பல்கலைக்கழக விடுதிக்குள் நுழைந்த கும்பல், நமாஸ் செய்துகொண்டிருந்த ஆப்கானிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தானை சேர்ந்த இஸ்லாமிய மாணவர்களைத் தாக்கியதால் ஐந்து சர்வதேச மாணவர்கள் காயமடைந்தனர்.
கலவரம் செய்த குற்றச்சாட்டின் பேரில் 25 பேர் மீது எஃப்ஐஆர் பதிவு
பல்கலைக்கழக வளாகத்திற்குள் உள்ள தங்களுடைய விடுதியில் ரம்ஜான் தொழுகை நடத்திக் கொண்டிருந்த வெளிநாட்டு மாணவர்களைக் குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. தாக்குதல் நடத்தியவர்கள் விடுதி அறைகளை சேதப்படுத்தியதோடு, கோஷம் எழுப்பி, வெளிநாட்டு மாணவர்கள் மீது கற்களை வீசி, அவர்களை காயப்படுத்தினர். கலவரம் செய்த குற்றச்சாட்டின் பேரில் 25 பேர் மீது எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க ஒன்பது விசாரணைக் குழுக்கள் அமைக்கப்பட்டன. மற்றவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்தனர். இலங்கை மற்றும் தஜிகிஸ்தானைச் சேர்ந்த தலா ஒரு மாணவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் உடல்நிலை சீராக இருப்பதாகக் கூறப்படுகிறது.