சின்னசேலத்தில் நீட் தேர்வில் குறைவான மதிப்பெண் பெற்றதால் மாணவி தற்கொலை
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தில் நீட் தேர்வில் குறைவான மதிப்பெண் பெற்றதால் மன உளைச்சலில் மாணவி, பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். சின்னசேலம் அடுத்த இரவார் கிராமத்தைச் சேர்ந்த விவசாயியான ரவி என்பவரின் மகள், அங்குள்ள அரசுப் பள்ளியில் கடந்த வருடம் பன்னிரண்டாம் வகுப்பு படித்து முடித்தார். இந்நிலையில் நீட் தேர்வு எழுதியவர் 250 மதிப்பெண்கள் மட்டுமே பெற்றதாக கூறப்படுகிறது. குறைவான மதிப்பெண்கள் பெற்றதால் மன உளைச்சலில் இருந்தவர், கடந்த வாரம் வயலுக்கு அடிக்கும் களைக்கொல்லி மருந்தை குடித்ததாக கூறப்படுகிறது. பூச்சிக்கொல்லி மருந்தை குடித்ததை வீட்டில் சொல்லாமல் வயிற்று வலி ஏற்பட்டதாக வீட்டில் கூறியுள்ளார். இதனால் அருகில் உள்ள மருத்துவமனைக்கு மாணவியை அழைத்துச் சென்று பெற்றோர் சிகிச்சை அளித்தனர்.
சிகிச்சை பலன் இல்லாமல் மாணவி உயிரிழப்பு
இந்நிலையில், வயிற்று வலி மேலும் அதிகமாகவே மேல் சிகிச்சைக்காக, மாணவி சேலம் அரசு மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், இன்று அதிகாலை மாணவி உயிரிழந்தார். மாணவியின் உடல் பிரதேச பரிசோதனைக்கு பிறகு அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும் மாணவி நீட் தேர்வுக்காக பயிற்சி பெற்று வந்ததாகவும் கூறப்படுகிறது. காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர். தற்கொலை தடுப்பு மாநில உதவி மையம் :104, சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம், எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம், சென்னை - 600 028. தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)