தமிழகத்தில் இன்று 15 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை: சென்னை வானிலை ஆய்வு மையம்
செய்தி முன்னோட்டம்
வளிமண்டல சுழற்சி மற்றும் காற்றழுத்த தாழ்வு பாதை காரணமாக தமிழகத்தில் இன்று (செப்டம்பர் 30) சேலம், திருவாரூர் உள்ளிட்ட 15 மாவட்டங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. IMD அறிவிப்பின்படி, வட கடலோர தமிழகப் பகுதிகளின் மேல் சுமார் 1.5 கி.மீ உயரத்தில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சியும், தெற்கு உள் கர்நாடகா முதல் மன்னார் வளைகுடா வரை சுமார் 0.9 கி.மீ உயரத்தில் காற்றழுத்த தாழ்வு பாதையும் நிலவுகிறது.
கனமழை எச்சரிக்கை
கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள 15 மாவட்டங்கள்
இன்று, நீலகிரி, ஈரோடு, திருப்பூர், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, கடலூர், நாமக்கல், திருச்சிராப்பள்ளி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் மற்றும் புதுக்கோட்டை ஆகிய 15 மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்தில் காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.
இதர மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம், தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்கள் மற்றும் புதுவையில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
வானிலை முன்னறிவிப்பு
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு
சென்னையை பொறுத்தவரை இன்று, வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
மாலை அல்லது இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
அதிகபட்ச வெப்பநிலை 36-37° செல்சியஸை ஒட்டி இருக்கும்.
நாளை, நீலகிரி, கோயம்புத்தூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.
சென்னை நகரில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.