மகா கும்பமேளா குறித்து தவறான தகவல் பரப்பிய 140 சமூக ஊடக கணக்குகள் மீது வழக்கு பதிவு
செய்தி முன்னோட்டம்
பிரயாக்ராஜில் நடைபெறும் மகா கும்பமேளா விழா நிறைவடையும் நிலையில், திரிவேணி சங்கமத்தில் புனித நீராடுவதற்காக மில்லியன் கணக்கான பக்தர்கள் தொடர்ந்து கூடி வருகின்றனர்.
இருப்பினும், இந்த நிகழ்வு தொடர்பாக சமூக ஊடகங்களில் தவறான தகவல்கள் சிலரால் பரப்பப்பட்டு வருவதாக புகார்கள் கிளம்பின.
இந்நிலையில் மகா கும்பமேளா குறித்து தவறான தகவல்களை பரப்பியதற்காக 140 சமூக ஊடகக் கணக்குகள் மீது 13 எஃப்ஐஆர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை டிஐஜி வைபவ் கிருஷ்ணா உறுதிப்படுத்தினார்.
மேலும், மகா கும்பமேளாவின் இறுதிப் பெரிய நீராடலாக பிப்ரவரி 26 ஆம் தேதி நடைபெறவிருக்கும் மகா சிவராத்திரி விழாவிற்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக டிஐஜி வைபவ் கிருஷ்ணா உறுதியளித்தார்.
62 கோடி பக்தர்கள்
இதுவரை 62 கோடி பக்தர்கள் நீராடியதாக தகவல்
உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் கூற்றுப்படி, இதுவரை சுமார் 62 கோடி பக்தர்கள் மகா கும்பமேளாவை பார்வையிட்டுள்ளனர்.
ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 23) மட்டும் 87 லட்சத்திற்கும் அதிகமானோர் புனித நீராடினர்.
பாதுகாப்பு மற்றும் சீரான நிர்வாகத்தை உறுதி செய்வதற்காக, குறிப்பாக அயோத்தி தாம் ரயில் நிலையத்தில், விரிவான கூட்டக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் செயல்படுத்தப்பட்டுள்ளன.
மகா சிவராத்திரிக்கு முன்னதாக, 350க்கும் மேற்பட்ட பணியாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளதோடு, கடுமையான கூட்டக் கட்டுப்பாட்டு நெறிமுறைகளும் அமலில் உள்ளது.
கூட்ட நெரிசலைத் தடுக்க ரயில்கள் வரும் வரை அதிகாரிகள் ரயில்வே நடைமேடைகளுக்குள் செல்ல பொதுமக்களுக்கு தடை விதித்துள்ளனர்.
பக்தர்கள் தொடர்ந்து அதிக எண்ணிக்கையில் வருவதால், மகா கும்பமேளா அமைதியாகவும் பாதுகாப்பாகவும் முடிவடைவதை உறுதிசெய்ய அதிகாரிகள் விழிப்புடன் உள்ளனர்.