ஆந்திர தேர்தலில் ஜெகன் மோகன் ரெட்டி ஏன் படுதோல்வி அடைந்தார்?
ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள வீடுகளுக்கும், முதியவர்களுக்கும், பெண்களுக்கும், விவசாயிகளுக்கும், ஆட்டோ ஓட்டுநர்களுக்கும் மற்றும் பிறருக்கும் அவர்களது நலன் கருதி, பல திட்டங்களை அறிமுகப்படுத்திய தனது ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி, இவ்வளவு அவமானகரமான தோல்வியை ஏன் சந்தித்தது என்பதற்கான காரணம் தெரியவில்லை என்று பதவி விலகிய ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார். 2019இல் கிட்டத்தட்ட 50 சதவீத வாக்குகளுடன் 151 சட்டமன்ற தொகுதிகளையும், 23 மக்களவைத் தொகுதிகளையும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கைப்பற்றியது. ஆனால், இந்த வருடம் அக்கட்சி, 40 சதவீத வாக்குளுடன், வெறும் 10 சட்டமன்ற தொகுதிகளையும், 4 மக்களவைத் தொகுதிகளையும் மட்டுமே பெற்றுள்ளது.
இந்த படுதோல்விக்கான காரணம் என்னவாக இருக்கலாம்?
2023இல் சந்திரபாபு கைது செய்யப்பட்டது, அவரை முற்போக்கான தெலுங்கு அரசியல் தலைமையின் அடையாளமாக கருதிய படித்த வகுப்பினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவரது கைது பழிவாங்கும் அரசியலாக இருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது. சந்திரபாபுவின் தலையெழுத்தை மாற்றிய திருப்புமுனை, இந்த பிரச்சனைகளில் பவன் கல்யாண் தலையிட்ட போது ஏற்பட்டது. அப்போது சந்திரபாபுவுக்கு தனது முழு ஆதரவையும் அறிவித்த பவன் கல்யாண், தெலுங்கு தேசம் கட்சியுடன் இணைந்து தேர்தலில் போட்டியிடுவோம் என்று அறிவித்தார். இதற்கிடையில், ஒருமுறை அவர் சந்திரபாபு நாயுடுவை சிறையில் சந்திக்க சென்ற போது பவன் கல்யாணுக்கு அனுமதி மறுக்கப்பட்டு, அவர் இரவு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டார். அந்த சம்பவங்களும் ஜெகன் மோகன் ரெட்டிக்கு எதிராக மக்களின் மனநிலையை மாற்றி இருக்கலாம்.