தென் ஆப்பிரிக்காவில் இருந்து இந்தியாவிற்கு வந்த 12 சிறுத்தைகள்
தென்னாப்பிரிக்காவில் இருந்து 12 சிறுத்தைகள் மத்தியப் பிரதேசத்துக்கு வந்து சேர்ந்தன. சிறுத்தைகளை ஏற்றி வந்த விமானப்படை விமானம் குவாலியர் விமானப்படை தளத்தில் காலை 10 மணிக்கு தரையிறங்கியது. அடுத்து, அந்த சிறுத்தைகளை ஹெலிகாப்டர்கள் மூலம் குனோ தேசிய பூங்காவிற்கு அதிகாரிகள் அழைத்துச் செல்வார்கள். ஐந்து பெண் சிறுத்தைகளும் ஏழு ஆண் சிறுத்தைகளும் மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் பூபேந்தர் யாதவ் ஆகியோரால் குனோ தேசிய பூங்காவில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட அடைப்புகளுக்குள் விடுவிக்கப்படும். சிறுத்தைகளுக்கான காப்பகத்தில் 10 தனிமைப்படுத்தப்பட்ட அறைகள் உருவாக்கப்பட்டுள்ளன என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்திய வனவிலங்கு சட்டங்களின்படி, விலங்குகள் புதிதாக நாட்டிற்குள் வந்தால் அவை 30 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட வேண்டும்.
இந்தியாவிற்கு வந்த எட்டு நமீபிய சிறுத்தைகள்
கடந்த ஆண்டு செப்டம்பரில், நமீபியாவில் இருந்து எட்டு சிறுத்தைகள் இந்தியாவுக்கு விமானம் மூலம் அனுப்பப்பட்டன. எட்டு நமீபிய சிறுத்தைகளும் தற்போது வேட்டையாடும் இடத்தில் அடைக்கப்பட்டுள்ளன. ஆறு சதுர கிமீ பரப்பளவு கொண்ட அந்த இடத்தில் அவை ஒன்றோடு ஒன்று தொடர்பு கொள்ள முடியும். விரைவில் அந்த சிறுத்தைகள் காட்டுக்குள் அவிழ்த்து விடப்படும். 2020ஆம் ஆண்டில், இந்தியாவின் உச்ச நீதிமன்றம், ஆப்பிரிக்க சிறுத்தைகளை, சோதனையின் அடிப்படையில் நாட்டிற்குள் கொண்டு வரலாம் என்று தீர்ப்பளித்ததை அடுத்து அது செயல்படுத்தப்பட்டுள்ளது. ஆசிய சிறுத்தைகள் 1940களின் பிற்பகுதியில் இந்தியாவில் மொத்தமாக அழிந்துவிட்டன. 1950களில் இருந்து சிறுத்தைகளை மீண்டும் இந்தியாவிற்குள் கொண்டுவர முயற்சிகள் எடுக்கப்பட்டு கொண்டு தான் இருக்கிறது. ஆனால், அது தற்போது தான் சாத்தியமாகி இருக்கிறது.