மத்திய பிரதேசம்: இந்தியாவுக்கு வரும் 12 ஆப்பிரிக்க சிறுத்தைகள்
கடந்த ஆண்டு நமீபியாவிலிருந்து எட்டு சிறுத்தைகள் இந்தியாவிற்கு இடமாற்றம் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து, தற்போது ஒரு டஜன் ஆப்பிரிக்க சிறுத்தைகள் இந்தியாவுக்கு வரவுள்ளன. தென்னாப்பிரிக்காவிலிருந்து ஐந்து பெண் சிறுத்தைகளும் ஏழு ஆண் சிறுத்தைகளும் சனிக்கிழமையன்று(பிப் 18) மத்திய பிரதேசத்தில் உள்ள தேசிய பூங்காவிற்கு விமானம் மூலம் வர உள்ளது. அடுத்த தசாப்தத்தில் நிறைய சிறுத்தைகளை இந்தியாவிற்கு அனுப்பி வைக்க ஒப்புக்கொண்ட தென்னாப்பிரிக்கா, ஒரு ஒப்பந்தத்தில் கடந்த ஜனவரி மாதம் கையெழுத்திட்டது. அந்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக இந்த இடமாற்றம் நடைபெற உள்ளது. ஆசிய சிறுத்தைகள் 1940களின் பிற்பகுதியில் இந்தியாவில் மொத்தமாக அழிந்துவிட்டன.
ஏற்கனவே இந்தியாவிற்குள் வந்த 8 சிறுத்தைகள்
அதிகப்படியான வேட்டையாடுதல் மற்றும் வாழ்விடம் இல்லாமல் போனது ஆகிய காரணங்களால் தான் அந்த சிறுத்தைகள் அழிந்து போனதாக நிபுணர்கள் கூறுகின்றனர். 2020ஆம் ஆண்டில், இந்தியாவின் உச்ச நீதிமன்றம், ஆப்பிரிக்க சிறுத்தைகளை, சோதனையின் அடிப்படையில் நாட்டிற்குள் கொண்டு வரலாம் என்று தீர்ப்பளித்தது. 2022ஆம் ஆண்டில், எட்டு சிறுத்தைகள் நமீபியாவிலிருந்து மத்தியப் பிரதேசத்தில் உள்ள குனோ தேசிய பூங்காவிற்கு கொண்டு வரப்பட்டன. தற்போது, மேலும் 12 சிறுத்தைகளை மத்திய பிரதேசத்திற்கு கொண்டு வர உள்ளனர். 12 சிறுத்தைகளும் சனிக்கிழமை மதியம் தேசிய பூங்காவிற்கு வந்து சேரும் என்று வனவிலங்கு நிபுணர்கள் கூறியுள்ளனர். 1950களில் இருந்து சிறுத்தைகளை மீண்டும் இந்தியாவிற்குள் கொண்டுவர முயற்சிகள் எடுக்கப்பட்டு கொண்டு தான் இருக்கிறது. ஆனால், அது தற்போது தான் சாத்தியமாகி இருக்கிறது.