அயோத்தி ராமர் கோயிலுக்கு 11 நாட்களில் 11 கோடி ரூபாய் நன்கொடை
செய்தி முன்னோட்டம்
அயோத்தியில் உள்ள ராமர் கோயிலுக்கு காணிக்கை மற்றும் நன்கொடையாக ரூ.11 கோடியும், அதில் நன்கொடை பெட்டிகளில் சுமார் ரூ.8 கோடியும், காசோலைகள் மற்றும் ஆன்லைன் பரிவர்த்தனைகள் மூலம் ரூ.3.50 கோடியும் பெறப்பட்டுள்ளது.
சென்ற மாதம், ஜனவரி 22 ஆம் தேதி, ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றதிலிருந்து இதுவரை 25 லட்சம் பக்தர்கள் கோயிலுக்கு வந்துள்ளனர் என கோவில் அறக்கட்டளையின் அலுவலக பொறுப்பாளர் பிரகாஷ் குப்தா கூறியுள்ளார்.
அதோடு,கோவில் கருவறையில், தெய்வம் அமர்ந்த நிலையில், சன்னதிக்கு எதிரே உள்ள 'தரிசன பாதை'க்கு அருகில், நான்கு பெரிய அளவிலான காணிக்கை பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளதாகவும், அதில் பக்தர்கள் நன்கொடை வழங்குவதாகவும் கூறினார்.
நன்கொடை
ராமர் கோயிலுக்கு நன்கொடை
இது தவிர, 10 கணினிமயமாக்கப்பட்ட கவுண்டர்களிலும் மக்கள் நன்கொடை வழங்குகிறார்கள்.
நன்கொடை கவுண்டரில் கோவில் அறக்கட்டளை பணியாளர்கள் நியமிக்கப்பட்டு, மாலையில் கவுன்டர் மூடப்பட்ட பின் அறக்கட்டளை அலுவலகத்தில் பெறப்பட்ட நன்கொடை தொகைக்கான கணக்கை சமர்ப்பிப்பதாக அவர் கூறினார்.
11 வங்கி ஊழியர்கள் மற்றும் கோவில் அறக்கட்டளையைச் சேர்ந்த 3 பேர் அடங்கிய 14 பேர் கொண்ட குழு, நான்கு காணிக்கை பெட்டிகளில் காணிக்கைகளை எண்ணுகிறது எனவும் அவர் தெரிவித்தார்.
நன்கொடை தொகையை டெபாசிட் செய்வது முதல் அதை எண்ணுவது வரை அனைத்தும் சிசிடிவி கேமராக்களின் கண்காணிப்பில் செய்யப்படுவதாக குப்தா கூறினார்.