தங்கலான் படத்தின் இரண்டாம் பாகம் வருமா? நடிகர் விக்ரம் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு
நடிகர் விக்ரம் தற்போது தனது சமீபத்திய வெளியீடான தங்கலான் படம் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், படத்தின் இரண்டாம் பாகம் தொடங்கப்படும் என அறிவித்துள்ளார். வெள்ளியன்று (ஆகஸ்ட் 16) ஹைதராபாத்தில் நடந்த தங்கலானுக்கான விளம்பர நிகழ்ச்சியின் போது இந்த அறிவிப்பை வெளியிட்டார். பா ரஞ்சித் இயக்கத்தில், 1800களில் கோலார் தங்க வயலை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட இந்த பீரியட் ஆக்ஷன் டிராமா சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 15 அன்று திரையரங்குகளில் வெளியானது. பார்வதி திருவோத்து, மாளவிகா மோகனன், பசுபதி மற்றும் டேனியல் கால்டாகிரோன் மற்றும் பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். ஸ்டுடியோ கிரீன் மற்றும் நீலம் புரொடக்சன் இணைந்து இந்த படத்தை தயாரித்துள்ளது.
இரண்டாம் பாகம் குறித்து விக்ரம் விளக்கம்
ஹைதராபாத்தில் நடந்த விளம்பர நிகழ்வின் போது பேசிய விக்ரம், "ஞானவேல்ராஜா (தயாரிப்பாளர்), ரஞ்சித் மற்றும் நானும் இரண்டாம் பாகத்தை விரைவில் எடுக்க விரும்புவது குறித்து விவாதித்தோம்." என்றார். மேலும், "நாங்கள் படத்தை விரும்பி 100 பாகங்களை உருவாக்க விரும்புவதால் மட்டுமல்ல, நீங்கள் அனைவரும் எங்களுக்குத் தந்த அன்பு. இந்தப் படத்தை நீங்கள் விரும்பும் விதம், ஆதரவு, இந்த கதையைத் தொடர வேண்டும் என்று நாங்கள் உணர்கிறோம்." என்று தெரிவித்தார். கோலார் தங்க வயல்களில் தங்கத்தை கண்டுபிடிக்க ஒரு பிரிட்டிஷ் அதிகாரியால் நியமிக்கப்பட்ட பழங்குடியினரின் குழுவை மையமாகக் கொண்டு இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது. விக்ரமுடன் ரஞ்சித் இணைந்துள்ள முதல் படமும் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.