
பஹல்காம் தொடர்பான அறிக்கையை தவறாக புரிந்து கொண்டவர்களுக்கு விளக்கம்; புதிய அறிக்கை வெளியிட்ட விஜய் ஆண்டனி
செய்தி முன்னோட்டம்
ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் இந்தியா முழுவதும் பரவலான சீற்றத்தைத் தூண்டியுள்ளது.
இதற்கு பதிலளிக்கும் விதமாக, நடிகர் விஜய் ஆண்டனி சமூக ஊடக தளங்களில் ஒரு அறிக்கையை வெளியிட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் இரங்கல் தெரிவித்தார்.
அதில் தாக்குதலுக்கு இரங்கல் தெரிவித்தது மட்டுமல்லாமல், பாகிஸ்தானில் வசிக்கும் 50 லட்சம் இந்தியர்கள் மற்றும், பாகிஸ்தானியர்களையும் கவனத்தில் கொள்ள வேண்டும் என்றார்.
மேலும், இந்தியர்களைப் போலவே அவர்களும் அமைதியையும் மகிழ்ச்சியையும் விரும்புகிறார்கள் என்றும் அதில் தெரிவித்திருந்தார்.
அவரது அறிக்கை பல இணையவாசிகளிடமிருந்து விமர்சனங்களை ஈர்த்தது.
விளக்கம்
விளக்க அறிக்கை வெளியிட்ட விஜய் ஆண்டனி
தொடர்ந்து எதிர்ப்புகளை எதிர்கொண்ட விஜய் ஆண்டனி, தவறான புரிதல்களை நிவர்த்தி செய்ய ஒரு விளக்கத்தை திங்கட்கிழமை (ஏப்ரல் 28) வெளியிட்டுள்ளார்.
தனது புதிய அறிக்கையில், காஷ்மீரில் நடந்த காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் இந்தியாவின் ஒற்றுமையை சீர்குலைக்கும் நோக்கில் உள்ள பயங்கரவாதிகளால் நிகழ்த்தப்பட்டது என்பதை அவர் வலியுறுத்தினார்.
மேலும், இந்திய அரசாங்கமும் அதன் குடிமக்களும் நாட்டின் இறையாண்மையை வலிமையுடனும் உறுதியுடனும் பாதுகாப்போம் என்று அவர் வலியுறுத்தினார்.
தனது கருத்துக்களை தவறாக புரிந்துகொண்டவர்களுக்கு என தலைப்பிட்டு அவர் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
ஏற்கனவே சினிமா துறையில் உள்ள சிலரும் இதேபோன்ற தொனியில் பேசி எதிர்ப்பைப் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.