LOADING...
சிம்பு - வெற்றிமாறன் இணையும் படம் உறுதி; அடுத்த 15 நாட்களில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு?
சிம்பு - வெற்றிமாறன் இணையும் படம் உறுதி

சிம்பு - வெற்றிமாறன் இணையும் படம் உறுதி; அடுத்த 15 நாட்களில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு?

எழுதியவர் Sekar Chinnappan
Aug 30, 2025
05:20 pm

செய்தி முன்னோட்டம்

தமிழ் திரையுலகில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த நடிகர் சிம்பு மற்றும் இயக்குநர் வெற்றிமாறன் கூட்டணி உறுதியாகியுள்ளது. தனது அடுத்த படம் குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், வெற்றிமாறன் ஒரு நிகழ்ச்சியில் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதாவது இன்னும் 10 முதல் 15 நாட்களுக்குள் தனது அடுத்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என அவர் கூறியிருப்பது சிம்பு ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 'STR 49' என்ற தற்காலிகத் தலைப்புடன், கலைப்புலி தாணு தயாரிப்பில் சிம்பு - வெற்றிமாறன் கூட்டணியில் இந்தப் படம் உருவாக இருந்தது. படத்திற்கான ப்ரோமோ ஷூட் கூட நடத்தப்பட்டது. ஆனால், ஜூலை மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட அறிவிப்பு, சில சிக்கல்கள் காரணமாகத் தாமதமானது.

வதந்தி

வதந்திகளுக்கு முடிவு

இதனால், இப்படம் கைவிடப்படலாம், தயாரிப்பாளர் அல்லது ஹீரோ மாறலாம் என்றெல்லாம் வதந்திகள் பரவின. இந்த வதந்திகளைப் போக்கும் வகையில், வெற்றிமாறன் திரைப்படம் கண்டிப்பாக நடக்கும் என்று சில வாரங்களுக்கு முன்பு தெரிவித்திருந்தார். தற்போது, அடுத்த 15 நாட்களில் அறிவிப்பு வெளியாகும் என அவர் கூறியிருப்பது, படத்தில் இருந்த சிக்கல்கள் தீர்க்கப்பட்டு விட்டன என்பதைக் காட்டுகிறது. சிம்புவுக்கு உடனடியாக ஒரு வெற்றிப்படம் தேவைப்படும் நிலையில், தக்லைஃப் திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. எனவே, வெற்றிமாறன் உடனான இந்தப் படம் சிம்புவின் திரை வாழ்வில் ஒரு திருப்புமுனையாக அமையும் என ரசிகர்கள் நம்புகின்றனர். இந்தப் படம் குறுகிய காலத்தில் முடிக்கப்படும் என்பதால், அடுத்த ஆண்டு தொடக்கத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுத்தரும் என்ற நம்பிக்கை உள்ளது.