மூத்த நடிகர் டெல்லி கணேஷ் உடல்நலக்குறைவால் காலமானார்
பழம்பெரும் தமிழ் நடிகர் டெல்லி கணேஷ் வயது மூப்பு காரணமாக உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 80. நேற்று (நவம்பர் 9) இரவு 11.30 மணியளவில் காலமானார். இறுதிச் சடங்குகள் இன்று அதாவது நவம்பர் 10ஆம் தேதி நடைபெறும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. 1944ஆம் ஆண்டு ஆகஸ்ட் 1ஆம் தேதி பிறந்த டெல்லி கணேஷ், 1976ஆம் ஆண்டு பிரபல இயக்குநர் கே.பாலசந்தரின் பட்டினப் பிரவேசம் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். பல ஆண்டுகளாக, அவர் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் உட்பட 400 க்கும் மேற்பட்ட படங்களில் தோன்றினார். நடிப்பதற்கு முன், அவர் இந்திய விமானப்படையிலும் ஒரு தசாப்தம் அதாவது 1964-1974 வரை பணியாற்றினார்.
பேர் சொல்லும் படங்கள்
நாயகன் (1987) மற்றும் மைக்கேல் மதன காம ராஜன் (1990) உள்ளிட்ட படங்களில் நடித்ததற்காக டெல்லி கணேஷ் பிரபலமானவர். அபூர்வ சகோதரர்கள் (1989), ஆஹா..! (1997), தெனாலி (2000), மற்றும் எங்கம்மா மகாராணி (1981) ஆகியவற்றில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருபபார். 1979 ஆம் ஆண்டில், பாசி படத்தில் நடித்ததற்காக தமிழ்நாடு மாநில திரைப்பட விருதை வென்றார். 1994 இல் அவருக்கு கலைமாமணி விருது வழங்கப்பட்டது. அவர் வில்லன், ஹீரோவின் நண்பர் மற்றும் தந்தை உட்பட பலவிதமான கதாபாத்திரங்களை ஏற்று நடித்துள்ளார் மற்றும் ரஜினிகாந்த், கமல்ஹாசன் மற்றும் விஜயகாந்த் உள்ளிட்ட பிரபலங்களுடன் பணியாற்றியுள்ளார்.