Page Loader
திரைப்பட உலகுக்கு பெரும் இழப்பு: 'அபிநய சரஸ்வதி' பி. சரோஜா தேவி மறைந்தார்
'அபிநய சரஸ்வதி' பி. சரோஜா தேவி மறைந்தார்

திரைப்பட உலகுக்கு பெரும் இழப்பு: 'அபிநய சரஸ்வதி' பி. சரோஜா தேவி மறைந்தார்

எழுதியவர் Venkatalakshmi V
Jul 14, 2025
10:56 am

செய்தி முன்னோட்டம்

இன்று இந்திய சினிமா, அதன் புகழ்பெற்ற நடிகைகளில் ஒருவரான 'பத்மபூஷண்' பி. சரோஜா தேவி மறைவால் ஆழ்ந்த துக்கத்தில் மூழ்கியுள்ளது. "அபிநய சரஸ்வதி", "கன்னடத்து பைங்கிளி" என பல சிறப்பு பெயர்களால் அழைக்கப்பட்ட பி. சரோஜா தேவி, தென்னிந்திய திரையுலகின் சகாப்த நடிகையாக பாராட்டப்பட்டவர். கடந்த சில நாட்களாக உடல்நலம் குன்றியிருந்த சரோஜா தேவி, பெங்களுருவில் காலமானார். அவருக்கு வயது 87. சரோஜா தேவியின் வளர்ப்பு மகள் புவனேஸ்வரி இளம் வயதிலே காலமாகிவிட்டார் எனக்கூறப்படுகிறது. தற்போது அவர் தனது இரண்டு பேரக்குழந்தைகள் இந்திரா மற்றும் கௌதம் ஆகியோருடன் வாழ்ந்து வந்தார்.

பயணம்

பின்னணியும், திரைப்படப் பயணமும்

1938ஆம் ஆண்டு பெங்களூருவில் பிறந்த சரோஜா தேவி, 1955-இல் கன்னடத்தின் பிரபலமான படமான "மகாகவி காளிதாசா"வில் தனது திரையுலக பயணத்தைத் தொடங்கினார். 1958-ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர் நடிப்பில் வெளியான "நாடோடி மன்னன்" படம் அவரை தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக உயர்த்தியது. அதன்பின், தமிழ், கன்னடம், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். 1955-1984 இடைப்பட்ட 30 ஆண்டுகளில், 161 படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த சரோஜா தேவி, சிவாஜி கணேசன், எம்.ஜி.ஆர், என்.டி.ராமராவ் மற்றும் ராஜ்குமார் ஆகியோருடன் இணைந்து வெற்றிப் படங்களில் நடித்துள்ளார். MGRக்கு மிகவும் ராசியான நடிகையாக கருதப்பட்டவர் அவருக்கு ஜோடியாக 26 திரைப்படங்களில் இணைந்து நடித்திருக்க, சிவாஜியுடன் மட்டும் 22 வெற்றிப்படங்களை வழங்கியுள்ளார்.

விருது

விருதுகளும் மரியாதைகளும்

சினிமாவில் செய்த பங்களிப்பிற்காக 1969-ஆம் ஆண்டு பத்மஸ்ரீ, மற்றும் 1992-ஆம் ஆண்டு பத்மபூஷண் ஆகிய விருதுகள் வழங்கப்பட்டன. மேலும், தமிழ்நாட்டின் கலைமாமணி, மற்றும் பெங்களூரு பல்கலைக்கழகத்தின் கௌரவ முனைவர் பட்டம் உள்ளிட்ட பல அங்கீகாரங்களும் கிடைத்தன. 53வது தேசிய திரைப்பட விருதுகளுக்கான நடுவர் குழுவின் தலைவர் மற்றும் கன்னட சலஞ்சித்ர சங்கத்தின் துணைத் தலைவர் ஆகிய பொறுப்புகளையும் வகித்துள்ளார்.

தனிப்பட்ட வாழ்க்கை

தனிப்பட்ட வாழ்க்கையும் பொதுநல பங்களிப்பும்

அவரது கணவர் ஸ்ரீ ஹர்ஷா இளவயதில் காலமானபின்னர் காதல் படங்களில் நடிப்பதை தவிர்த்தார் பி.சரோஜா தேவி. எனினும் சமூக சீர்திருத்த படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தினார். அதோடு, சினிமா மேம்பாட்டிலும், இளம் கலைஞர்களை ஊக்குவிப்பதிலும் தொடர்ந்து ஈடுபட்டார். தனது நடிப்பு, அறம், ஃபேஷன் ஞானம் என அனைத்திலும் தாக்கம் செலுத்தியவர். 1960களில் அவரது புடவைகள், நகைகள், மற்றும் சிகை அலங்காரம் அனைத்தும் அந்த காலகட்டத்தின் ஃபேஷன் சின்னங்களாக மாறின.