அம்பானி இல்ல திருமணம்: ஆதரவற்றோர் திருமண நிகழ்வை மும்பையின் தானே பகுதியில் நடத்த திட்டம்
ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சண்ட் ஆகியோரின் திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, ஏழை மக்களுக்கான வெகுஜன திருமண விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஏழை எளியவர்களுக்காக நடத்தப்படும் இந்த வெகுஜன திருமண விழா ஜூலை 2ஆம் தேதி மாலை 4:30 மணிக்கு பால்கரில் உள்ள சுவாமி விவேகானந்த் வித்யாமந்திரில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. எனினும் தற்போது விழா நிகழ்வு தானேயில் உள்ள ரிலையன்ஸ் கார்ப்பரேட் பூங்காவிற்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த மாற்றத்தை பற்றி இந்தியா டுடே செய்தி வெளியிட்டுள்ளது. ஆனந்த் அம்பானிக்கும், ராதிகா மெர்ச்சண்டிற்கும் ஜூலை 12 ஆம் தேதி மும்பையின் ஜியோ உலக மாநாட்டு மையத்தில் திருமணம் நடைபெற உள்ளது. அதற்கு முன்னதாக இந்த வெகுஜன திருமணத்தை நடத்த அம்பானி குடும்பம் திட்டமிட்டுள்ளது.
வைரலான வெகுஜன திருமண அழைப்பிதழ்!
முன்னதாக, ஆனந்த் அம்பானி திருமண அழைப்பிதழை போலவே இந்த வெகுஜன திருமணத்திற்கான அழைப்பிதழும் வைரலானது. அதில்,"ஆனந்த் அம்பானி & ராதிகா மெர்ச்சன்ட் திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, தாழ்த்தப்பட்டவர்களின் வெகுஜன திருமணத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது." மேலும், "நீதா & முகேஷ் அம்பானி ஆகியோர் இந்த உன்னத நோக்கத்திற்காக பங்களிக்கின்றனர், மேலும் இந்த நிகழ்வில் குடும்பத்துடன் கலந்துகொள்வார்கள்" என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. "இந்த அன்பின் கொண்டாட்டத்திற்கு சாட்சியாக நீங்கள் எங்களுடன் இணைந்தால் நாங்கள் மகிழ்ச்சியடைவோம்." என அச்சிடப்பட்டிருந்தது. இதற்கிடையில், கடந்த வாரம் சனிக்கிழமை (ஜூன் 29) மும்பையில் உள்ள அம்பானி இல்லத்தில் ஒரு தனிப்பட்ட பூஜையுடன் ஆனந்த் மற்றும் ராதிகாவின் திருமண விழாக்கள் தொடங்கியது .
திருமண விழா மற்றும் ஆடை குறியீடு விவரங்கள்
ஆனந்த் அம்பானி- ராதிகா மெர்ச்சண்ட் திருமணம் 3 நாள் நிகழ்வாக நடைபெறவுள்ளது. மும்பையின் ஜியோ வேர்ல்ட் சென்டரில் நடைபெறும் திருமண வைபவம், ஷுப் விவாஹ் எனப்படும் முக்கிய திருமண விழாவுடன் ஜூலை 12 ஆம் தேதி துவங்கவுள்ளது. இதைத் தொடர்ந்து ஜூலை 13 அன்று ஷுப் ஆஷிர்த்வாத் விழா நடைபெறும். அந்த நிகழ்விற்கு கலந்துகொள்ளவரும் விருந்தினர்கள் "இந்திய பராம்பரிய உடையை" அணியுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். கொண்டாட்டத்தின் இறுதி நாளான ஜூலை 14, "இந்திய நவீன உடைகள்" என்ற ஆடைக் குறியீட்டுடன் மங்கல் உத்சவ் அல்லது திருமண வரவேற்பு இடம்பெறும்.