ஆனந்த் அம்பானியின் திருமணத்தை ஒட்டி ஆதரவற்ற ஜோடிகளுக்கு திருமணம்: ரிலையன்ஸ் குழுமம் அறிவிப்பு
மும்பை: ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சண்ட் ஆகியோரின் திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, ஏழை மக்களுக்கான வெகுஜன திருமண விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஏழை எளியவர்களுக்காக நடத்தப்படும் இந்த வெகுஜன திருமண விழா ஜூலை 2 ஆம் தேதி மாலை 4:30 மணிக்கு பால்கரில் உள்ள சுவாமி விவேகானந்த் வித்யாமந்திரில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆனந்த் அம்பானிக்கும், தொழிலதிபர் வீரேன் மெர்ச்சன்ட்டின் மகளான ராதிகா மெர்ச்சண்டிற்கும் ஜூலை 12 ஆம் தேதி மும்பையின் பாந்த்ரா குர்லா வளாகத்தில்(பிகேசி) உள்ள ஜியோ உலக மாநாட்டு மையத்தில் திருமணம் நடைபெற உள்ளது. இந்த நிகழ்வு பாரம்பரியமும் நவீனமும் கலந்த ஒரு நிகழ்வாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.
ஜூலை 14 ஆம் தேதி வரை நடைபெறும் திருமண நிகழ்ச்சிகள்
இதற்கிடையில், ரிலையன்ஸ் அறக்கட்டளையின் நிறுவனரும் தலைவருமான நீதா அம்பானி, காசி விஸ்வநாதர் கோவிலுக்கு சென்று சிவபெருமானுக்கு முதல் அழைப்பிதழை வழங்கி தனது மகனின் திருமண ஏற்பாடுகளை தொடங்கி வைத்தார். இந்த திருமணத்திற்கான முக்கிய விழாக்கள் ஜூலை 12 அன்று ஷுப் விவா விழாவுடன் தொடங்கும். இந்த விழாவில் கலந்து கொள்ளும் விருந்தினர்கள் பாரம்பரிய இந்திய ஆடைகளை அணிந்து வருமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர் ஜூலை 13 ஆம் தேதி ஷுப் ஆஷிர்வாத் என்ற நிகழ்ச்சியும், ஜூலை 14 ஆம் தேதி மங்கள் உத்சவ், திருமண வரவேற்பு நிகழ்ச்சியும் நடைபெறும். அதோடு ஆனந்த் அம்பானியின் திருமண விழாக்கள் நிறைவடையும்.