சென்னையில் நடைபெறும் வெனிசுலா படவிழா: '96 படத்தின் ஒரிஜினல் திரைப்படத்தை காண வேண்டுமா?
2018 -இல் வெளியாகி வெற்றிநடை போட்ட படம் 96. படத்தின் பாடல்கள், வசனங்கள், உடைகள் என அனைத்தும் இன்றளவும் பிரபலமாக உள்ளது. நடிகை திரிஷாவின் திரைவரலாற்றில், இந்த படம் முக்கியமானதாகும். பள்ளிக்கூடத்தில் வரும் பதின்பருவ காதலை பேசும் இந்த படத்தில், விரசம் இல்லாமல், மரத்தை சுற்றி டூயட் பாடாமல், தமிழ் திரைப்படங்களில் ஒரு புது வித முயற்சியாக பார்க்கப்பட்ட படம் இந்த '96. ஆனால், அந்த படம், ஒரு ஸ்பானிஷ் மொழி படத்தின் தழுவல் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? வெனிசுலா நாட்டில் ஸ்பானிய மொழியில் வெளியான படம், 'அமோர் கொயஸ்டா அரிபா' (Amor Cuesta Arriba). இந்த படத்தை தழுவி தான் நம்மவர்கள் 96 படத்தை இயக்கியுள்ளனர்.
சென்னையில் வெனிசுலா படவிழா
நேற்று, சென்னையில் துவங்கியுள்ள வெனிசுலா படவிழாவில், மேற்கூறிய படம் இன்று திரையிடப்படவுள்ளது. அதுமட்டுமின்றி, பல உலக விருதுகளை குவித்து வரும், அற்புதமான ஸ்பானிய படங்கள் பலவும், இந்த விழாவில் திரையிடப்படவுள்ளது. பிப்ரவரி 20 முதல் 23 வரை நடைபெறும் இந்த விழா, நுங்கம்பாக்கம் காலேஜ் ரோட்டில் உள்ள, அலையன்ஸ் பிரான்சைஸ் மையத்தில் நடைபெற்று வருகிறது. வெனிசுவேலா பொலிவாரியன் குடியரசின் தூதரகமும் (Embassy of the Bolivarian Republic of Venezuela) - இண்டோ சினி அப்ரிசியேசன் பவுண்டேஷனும் இணைந்து இப்படவிழாவை நடத்துகின்றன. ஓவ்வொரு நாள், மாலையும் 6:30 மணிக்கு, இந்த விழா தொடங்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.