பிரபல ஈரானிய திரைப்பட இயக்குநர் தருஷ் மெஹர்ஜுய் கத்தியால் குத்தி கொலை
ஈரானின் மிக முக்கியமான திரைப்பட இயக்குநர்களில் ஒருவராக கருதப்படும் தருஷ் மெஹர்ஜுய் மற்றும் அவரது மனைவி வஹிதே முகமதிஃபர் ஆகியோர் சனிக்கிழமை மாலை தெஹ்ரானுக்கு(ஈரான் தலைநகர்) அருகிலுள்ள அவர்களது வீட்டில் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டனர். கடைசியாக, இரவு உணவு சாப்பிட வீட்டுக்கு வரும்படி தனது மகள் மோனாவுக்கு இரவு 9:00 மணியளவில்(1730 GMT) தருஷ் மெஹர்ஜுய் குறுஞ்செய்தி அனுப்பி இருக்கிறார். ஆனால், ஒன்றரை மணி நேரம் கழித்து மோனா வீட்டுக்கு வந்து பார்த்தபோது, கத்தி குத்து காயங்களுடன் தருஷ் மெஹர்ஜுய் மற்றும் அவரது மனைவி வஹிதே முகமதிஃபர் ஆகியோர் உயிரிழந்து கிடப்பது தெரியவந்தது. குற்றம் நடந்த இடத்தில் வலுக்கட்டாயமாக கொலையாளி நுழைந்ததற்கான எந்த அறிகுறியும் காணப்படவில்லை என்று போலீஸார் தெரிவித்துள்ளனர்.
கொலையாளி யார் என்பது இதுவரை தெரியவில்லை
சம்பவம் நடந்த வீட்டின் கதவுகளுக்கு எந்த சேதமும் ஏற்படவில்லை என்றும் போலீசார் கூறியுள்ளனர். இந்த சம்பவத்துடன் தொடர்புடைய நான்கு சந்தேக நபர்கள் அடையாளம் காணப்பட்டு இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனால், கொலையாளி யார் என்பது இதுவரை தெரியவில்லை. டிசம்பர் 8, 1939 இல் தெஹ்ரானில் பிறந்த தருஷ் மெஹர்ஜுய், அமெரிக்காவில் தத்துவம் பயின்ற ஒரு ஈரானியர் ஆவார். இவர், ஜேம்ஸ் பாண்ட் தொடரின் பகடி கதையான "டயமண்ட் 33" என்ற தனது முதல் திரைப்படத்தை 1967இல் வெளியிட்டார். அது போக, தி கவ்(1969), மிஸ்டர் கல்லிபிள்(1970), தி சைக்கிள்(1977), தி டெனன்ட்ஸ்(1987), சாரா(1993), பரி(1995), லெய்லா(1997) போன்ற புகழ்பெற்ற திரைப்படங்களையும் இவர் இயக்கியுள்ளார்.