இந்த வாரம் திரையரங்குகள் மற்றும் ஓடிடிகளில் வெளியாகும் தமிழ் படங்களின் தொகுப்பு
தீபாவளிக்கு பின்னர் தமிழில் அதிகப்படியான திரைப்படங்கள் வெளியாகி வருகிறது. கடந்த வாரம் 7 படங்கள் வெளியான நிலையில், இந்த வாரம் 6 படங்கள் வெளியாக உள்ளது. இந்த வாரம், தமிழில் திரையரங்குகளில் வெளியாகும் திரைப்படங்களின் தொகுப்பை பார்க்கலாம். அனிமல்- தெலுங்கில் மாபெரும் வெற்றி பெற்ற அர்ஜுன் ரெட்டி திரைப்படத்தின் இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா, ஹிந்தியில் இயக்கும் இப்படத்தில் ரன்பீர் கபூர், பாபி தியோல், அனில் கபூர், ரஷ்மிகா மந்தனா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். அப்பா, மகன் உறவை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படத்தில், ரன்பீர் கபூர் மகனாகவும், அனில் கபூர் தந்தையாகவும் நடிப்பது குறிப்பிடத்தக்கது. இத்திரைப்படம், டிசம்பர் 1 ஆம் தேதி ஹிந்தி மற்றும் அனைத்து தென்னிந்திய மொழிகளில் வெளியாகியது.
இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகும் தமிழ் படங்கள்
அன்னபூரணி- ஒரு குக்கிராமத்தில் கட்டுக்கோப்பான குடும்பத்தில் வளர்க்கப்பட்ட ஒரு பெண் இந்தியாவின் சிறந்த சமையல்கலை வல்லுநர் ஆகிறார். பின்னர் அப்பெண்ணின் வாழ்க்கையில் நடைபெறும் எதிர்பாராத திருப்பங்களும், நிகழ்வுகளும் படத்தின் மீதி கதை. குக்கிராமத்து பெண்ணாக நயன்தாரா நடித்துள்ள நிலையில், சத்யராஜ், அச்யுத் குமார், கிங்ஸ்லி, ரவிக்குமார் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். நயன்தாராவின் 75வது படமான இது, டிசம்பர் முதல் நாள் திரையரங்குகளில் வெளியாகிறது. பார்க்கிங்- மலையாளத்தில் வெளியாகி வெற்றி பெற்ற ஐயப்பனும் கோஷியும் திரைப்படத்தின் சாயலில், இருவருக்குள் நடக்கும் ஈகோ யுத்தமே படத்தின் கதை. வாடகைக்கு வீடு வழங்கும் எம்எஸ் பாஸ்கருக்கும், அங்கு தங்கியிருக்கும் ஹரிஷ் கல்யாணக்கும், கார் நிறுத்துமிடம் தொடர்பாக எழும் பிரச்சனையே படத்தின் கதை. இப்படமும், நாளை மறுநாள் திரையரங்குகளில் வெளியாகிறது.
இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகும் தமிழ் படங்கள்
வா வரலாம் வா- சுரேஷ்பாபு ரங்கநாதன் தயாரித்து, இயக்கியுள்ள இப்படத்தில் பாலாஜி முருகதாஸ் நாயகனாக நடித்துள்ளார். பணக்கார வாழ்க்கை வாழ ஆசைப்படும் இளைஞன், அவரது நண்பருடன் சேர்ந்து 40 குழந்தைகளை கடத்துகிறார். அவர் எண்ணத்தில் வெற்றி அடைந்தாரா என்பது படத்தின் மீதி கதை. படத்தில் ரெடின் கிங்ஸ்லி, தீபா சங்கர், சிங்கம்புலி ஆகியோர் நடித்துள்ளனர். படத்திற்கு இசையமைப்பாளர் தேவா இசையமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. நாடு- மகிமா நம்பியார் முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படம், பல உண்மை சம்பவங்களை தழுவி படமாக்கப்பட்டுள்ளது. மருத்துவர் இல்லாமல் தவிக்கும் மலை கிராமத்திற்கு, மருத்துவராக நியமிக்கப்படும் மகிமா நம்பியார், அங்கு எவ்வாறு மருத்துவராக தாக்குப் பிடிக்கிறார் என்பது படத்தின் கதை. எம் சரவணன் இயக்கியுள்ள இப்படத்திற்கு, சி சத்யா இசையமைத்துள்ளார்.
இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகும் தமிழ் படங்கள்
சூரகன்- ஈகை என்ற இடைநீக்கம் செய்யப்பட்ட ஒரு ஒழுங்கற்ற காவல்துறை அதிகாரி, திவ்யா என்ற பெண்ணின் மரணம் குறித்து விசாரிக்கிறார். இந்த விசாரணையின் முடிவில், விஐபிகள் சம்பந்தப்பட்ட குற்றவியல் நெட்வொர்க்கை கண்டுபிடிப்பது படத்தின் கதை. சதீஷ் கீதா குமார் எழுதி, இயக்கி, ஒளிப்பதிவு செய்துள்ள படத்தில், கார்த்திகேயன் விநாயகம் காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளார். இது தவிர நடிகர் பாண்டியராஜன், ரேஷ்மா பசுபுலேட்டி, வின்சென்ட் அசோகன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இந்த வார ஓடிடி வெளியீடுகள்
800- இலங்கை கிரிக்கெட் அணியின் சுழற் பந்துவீச்சாளர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்று படமான 800, திரையரங்குகளில் வெளியாகி கவனிக்க தகுந்த வெற்றியை பெற்றது. எம்எஸ் ஸ்ரீபதி இயக்கிய இப்படத்தை, விவேக் ரங்காச்சாரி தயாரித்திருந்தார். ஜிப்ரான் படத்திற்கு இசையமைத்திருந்த நிலையில், மதுர் மிட்டல் முத்தையா முரளிதனாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இப்படத்தை, டிசம்பர் 2 ஆம் தேதி முதல் ஜியோ சினிமாவில் இலவசமாக காண முடியும்.