'எந்த விதி மீறலும் இல்லை..அது எங்கள் தனிப்பட்ட வீடியோ': தனுஷ் நோட்டீஸ்க்கு நயன்தாரா பதில்
நயன்தாராவின் 'நயன்தாரா: பியோண்ட் ஃபேரிடேல்' என்ற நெட்ஃபிலிக்ஸ் ஆவணப்படத்தில், தன்னுடைய ஒண்டெர் பார் நிறுவனம் தயாரித்த 'நானும் ரவுடி தான்' படத்தின் BTS காட்சிகள் தன்னுடைய அனுமதி இன்றி பயன்படுத்தப்பட்டதாக தனுஷ் வழக்கு தொடுத்திருந்தார். அதில், 10 கோடி ரூபாய் இழப்பீடு தரப்படவேண்டும் என கோரியிருந்தார். அந்த மனுவிற்கு நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனின் வழக்கறிஞர் பதிலளித்துள்ளார். அந்த பதிலில், பதிப்புரிமை மீறல் எதுவும் நடக்கவில்லை என்று கூறியுள்ளார். கேள்விக்குரிய காட்சிகள் நயன்தாரா- விக்னேஷ் சிவனின் தனிப்பட்ட நூலகத்திலிருந்து எடுக்கப்பட்டவை என்றும், திரைப்படத்தின் திரைக்குப் பின்னால் உள்ளவை (BTS) அல்ல என்றும் விளக்கினார். சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்த வழக்கின் அடுத்த விசாரணை டிசம்பர் 2ஆம் தேதி திங்கட்கிழமை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆவணப்படம் தொடர்பான வழக்கின் பின்னணி
நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனின் ஆவணப்படம், Nayanthara: Beyond The Fairytale, அவரது பிறந்தநாளான நவம்பர் 18 அன்று Netflix இல் வெளியிடப்பட்டது. வெளியீட்டிற்கு முன்னதாக, நயன்தாரா, தனுஷ் NOC (ஆட்சேபனை இல்லை சான்றிதழ்) வழங்க மறுத்ததை குறிப்பிட்டு கடுமையான 3 பக்க திறந்த கடிதம் எழுதினார். அதில் தனுஷ், தங்கள் வாழ்க்கையின் முக்கியமான படமாக கருதும் 'நானும் ரவுடி தான்' படத்தை தயாரித்த நிலையில், தனது ஆவணப்படத்தில் திரைப்படத்தின் சில காட்சிகளை பயன்படுத்த தடையில்லாச் சான்றிதழை (NOC) நிறுத்தி வைத்துள்ளார் என விமர்சித்தார். 'நானும் ரவுடி தான்' தொடர்பான உள்ளடக்கத்தை பயன்படுத்துவதற்கு இரண்டு வருடங்களாக அனுமதி கோரியும் கிடைக்கவில்லை எனக் கூறியுள்ளார்.