தங்கலான், கங்குவா வெளியாவதில் சிக்கலா? தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவிற்கு உயர் நீதிமன்றம் விதித்த கெடு
இன்று நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகி உள்ள 'கங்குவா' படத்தின் ட்ரைலர் வெளியாகிறது என ரசிகர்கள் பலரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர். அதேபோல இயக்குனர் பா.ரஞ்சித் மற்றும் 'சீயான்' விக்ரம் நடிப்பில் உருவான 'தங்கலான்' படத்தின் வெளியீட்டிற்காகவும் காத்துள்ளனர். படக்குழுவினரும் நகரம் வாரியாக, மாநிலம் வாரியாக தீவிரமாக ப்ரோமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் கடைசி நிமிட ட்விஸ்ட்டாக, இவ்விரு படங்களை தயாரித்த ஸ்டுடியோ க்ரீன் ஞானவேல் ராஜாவிற்கு சென்னை உயர் நீதிமன்றம் ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளது.
ஞானவேல் ராஜாவிற்கு உயர் நீதிமன்றம் விதித்த கெடு
உயர் நீதிமன்ற தீர்ப்பினால் வெளியீடு தள்ளிபோகுமா?
அந்த வழக்கின் உத்தரவுப்படி, தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா, அர்ஜூன்லால் சுந்தர்தாஸ் என்கிற பைனான்சியரிடம் பெற்றிருந்த கடனைத்திருப்பி செலுத்த தவறி விட்டார். அதனால் தங்கலான் மற்றும் கங்குவா ஆகிய படங்களின் வெளியீட்டிற்கு முன்னர் 1 கோடி டெபாசிட் செய்யப்பட வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. இதனால் தங்கலான் படத்தின் வெளியீட்டில் சிக்கல் ஏற்படுமோ என ரசிகர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். இது குறித்து தயாரிப்பாளர் தரப்பில் இன்னமும் விளக்கம் அளிக்கப்படவில்லை. ஏற்கனவே ஜனவரி மாதம் வெளியாக வேண்டியது. அதன் பின்னர் ஏப்ரல் விடுமுறையை குறி வைத்த இந்த படத்தின் வெளியீடு தற்போது ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.