மார்ச் மாதம் நடிகை தாப்ஸிக்கு திருமணம் நடக்கவிருப்பதாக தகவல்
சமீபத்தில் நடிகை ரகுல் ப்ரீத் சிங் மற்றும் ஜாக்கி பாக்னானி ஆகியோருக்கு திருமணம் நடைபெற்றது. இதற்கு அடுத்தபடியாக க்யூவில் இருப்பது நம்ம 'வெள்ளாவி' நடிகை தாப்ஸீ பன்னு. தென்னிந்திய சினிமாவில் கோலோச்சிய பின்னர், தற்போது பாலிவுட் படங்களில் கவனம் செலுத்தி வரும் தாப்ஸீ, தனது நீண்டகால காதலரான பேட்மிண்டன் வீரரான மத்தியாஸ் போவை, மார்ச் மாதம் திருமணம் செய்ய தயாராகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இடம் மற்றும் தேதிகள் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்றாலும், அவர்களது உறவு மற்றும் அவரது திருமண கொண்டாட்டங்கள் பற்றி தாப்ஸீ முன்னரே ஒரு சில பேட்டிகளில் தெரியப்படுத்தியுள்ளார். அதைப்பற்றி ஒரு ரீவைண்ட்.
ஒரு தசாப்தத்திற்கும் மேலாக டேட்டிங்
இந்த ஜோடி காதலிக்க தொடங்கி ஒரு தசாப்ததிற்கும் மேல் ஆகிவிட்டது. 13 வருடங்களுக்கு முன்னர் தாப்ஸீ பாலிவுட்டில் அறிமுகமானபோது மத்தியாஸ் போவை சந்தித்ததாக தெரிவித்தார். அன்றுமுதல், அவரை தான் காதலித்து வருவதாகவும், அவரை விட்டுபோகும் எண்ணமே இல்லை எனவும் தெரிவித்திருந்தார். பல நடிகர்கள், சினிமாதுறையில் காதலை கண்டாலும், தாப்ஸீ எப்போதும் திரைப்படம் அல்லாத நபரை காதலிக்கவே விரும்பினார். இவரின் காதலை சமீப காலம் வரை ரகசியமாகவே வைத்திருந்தார். இவர்களின் திருமணம், சீக்கிய-கிறிஸ்தவ முறைப்படி எளிமையாக நடக்கும் எனவும், ஆனால் பாலிவுட் நட்சத்திரங்கள் யாரும் அழைக்கப்படவில்லை என செய்திகள் தெரிவிக்கின்றன. அதேபோல, திருமண ஒப்பனைகளில் மிதமான மேக்-அப் தான் தேர்வு செய்ய இருப்பதாக தாப்ஸீ கூறியுள்ளார். தனக்கு ஹெவி மேக்-அப் பிடிக்காது எனவும் தெரிவித்தார்.