நடிகர் சூர்யா அரசியலுக்கு வரணும்; கங்குவா ஆடியோ வெளியீட்டு விழாவில் வந்த கோரிக்கை
நடிகரும் இயக்குனருமான இயக்குனர் போஸ் வெங்கட், சனிக்கிழமை (அக்டோபர் 26) நடைபெற்ற கங்குவா ஆடியோ வெளியீட்டு விழாவில், நடிகர் சூர்யா அரசியலுக்கு வர வேண்டும் எனக் கூறினார். நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) என்ற பெயரில் கட்சி தொடங்கியுள்ளதோடு, அதன் முதல் மாநாட்டை விழுப்புரம் அருகே உள்ள விக்கிரவாண்டியில் ஞாயிற்றுக் கிழமை நடத்த உள்ளார். இந்த மாநாட்டிற்கு ஒரு நாள் முன்னதாக, நடந்த கங்குவா ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய போஸ் வெங்கட், "சூர்யா தனது அன்பான ரசிகர்களை வழிநடத்துவது போல் ஒரு சூப்பர் ஸ்டார் அவர்களின் ரசிகர்களை வழிநடத்த வேண்டும்" என்று கூறியுள்ளார். இது ரசிகர்களுடனான சூர்யாவின் பிணைப்பை பிரதிபலிக்க கூறுவதாகத் தோன்றினாலும், அடுத்து கூறியவைதான் இதை பேசுபொருளாக்கியுள்ளது.
சூர்யாவை அரசியலுக்குள் இழுக்க திட்டமா?
தொடர்ந்து பேசிய போஸ் வெங்கட், "உங்கள் ரசிகர்களை நீதியின் பக்கம் வழிநடத்துங்கள். அவர்களை தொண்டு செய்பவர்களாகவும், மற்றவர்களை மதிக்கவும், நிறைவான வாழ்க்கையை வாழவும், அவர்களுக்குக் கல்வியையும், சரி தவறை அறியும் ஞானத்தையும் வழங்கவும். அதன்பிறகுதான் அரசியலுக்கு வருவது குறித்து யோசிக்க வேண்டும்." எனக் கூறினார். மேலும், "உங்கள் ரசிகர்களை முட்டாள்களாகக் கருதுவதன் மூலம் ஒரு தலைவர் பிறக்க முடியாது. அவர்களுக்கு கல்வி கற்பித்து படிக்க ஊக்குவிக்கவும். சூர்யா சார், நீங்கள் அரசியலுக்கு வருவது பற்றி யோசிக்க வேண்டும்." எனக் கூறினார். இது விஜய் தனது முதல் மாநாட்டை நடத்தும் சமயத்தில் வந்துள்ளதால், போஸ் வெங்கட்டின் பேச்சு சூர்யாவின் ரசிகர்களிடையே நெருடலை ஏற்படுத்தி உள்ளதாகக் கூறப்படுகிறது.