ரஜினிகாந்த் - ஷாருக்கான் இணையும் 'ஜெயிலர் 2': முழுமையான நட்சத்திரப் பட்டியல் அப்டேட்
செய்தி முன்னோட்டம்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் பாலிவுட் பாட்ஷா ஷாருக்கான் ஆகிய இரு பெரும் நட்சத்திரங்கள் முதல்முறையாக ஒரே திரையில் தோன்றும் வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வு 'ஜெயிலர் 2' படத்தின் மூலம் உறுதியாகியுள்ளது. ஹிந்துஸ்தான் டைம்ஸ் வெளியிட்டுள்ள செய்தியின்படி நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகும் இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தில் ஷாருக்கான் ஒரு முக்கிய கௌரவ வேடத்தில் நடிக்கவிருப்பது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தச் செய்தியை நடிகர் மோகன்லாலின் ஆடை வடிவமைப்பாளர் ஜிஷாத் ஷம்சுதீன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து உறுதிப்படுத்தியுள்ளார்.
உறுதி
உறுதி செய்த படக்குழு
இன்ஸ்டாகிராமில் ரசிகர்களுடனான ஒரு நேர்காணலில் ரஜினிகாந்த், ஷாருக்கான், மோகன்லால் மற்றும் சிவராஜ்குமார் ஆகியோர் ஒன்றாக இருப்பது போன்ற ஒரு 'AI' புகைப்படத்தைப் பகிர்ந்து, "கண்டிப்பா இருக்கும்" என்று ஜிஷாத் ஷம்சுதீன் பதிவிட்டுள்ளார். இது வெறும் வதந்தியல்ல, படத்தில் இவர்களின் கூட்டணி உறுதியாக இருப்பதை இது உணர்த்துகிறது. இதுவரை ஷாருக்கான் நடிப்பது குறித்து ஊடக செய்திகள் மட்டும் வெளியான நிலையில், உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் இல்லை. தற்போது படக்குழுவினர் ஒருவரே இந்த செய்தியை உறுதிப்படுத்திய நிலையில் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
விவரங்கள்
படத்தின் நட்சத்திர நடிகர்கள்
முதல் பாகத்தில் நடித்த ரஜினிகாந்த் மற்றும் ரம்யா கிருஷ்ணன் அதே கதாபாத்திரத்தில் நடிப்பார்கள் என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டது. இவர்கள் தாண்டி கௌரவ வேடங்களில் ஷாருக்கான், மோகன்லால், சிவராஜ்குமார், விஜய் சேதுபதி ஆகியோர் நடிக்கின்றனர். பாலிவுட்டின் மூத்த நடிகர் மிதுன் சக்கரவர்த்தி இந்தப் படத்தில் வில்லனாக நடிக்கிறார் எனக்கூறப்படுகிறது. இவர்களுடன் வித்யா பாலன் மற்றும் எஸ்.ஜே. சூர்யா ஆகியோரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர் என செய்திகள் தெரிவிக்கின்றன. சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் அனிருத் இசையில் உருவாகும் 'ஜெயிலர் 2' படத்தின் ரிலீஸ் குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.