Loading...
கேதார்நாத் கோயில் வழிபாடு: பாலிவுட் நடிகை சாரா அலி கானுக்கு எதிராக 'ஃபத்வா' அறிவிப்பு
பாலிவுட் நடிகை சாரா அலி கானுக்கு எதிராக 'ஃபத்வா' அறிவிப்பு

கேதார்நாத் கோயில் வழிபாடு: பாலிவுட் நடிகை சாரா அலி கானுக்கு எதிராக 'ஃபத்வா' அறிவிப்பு

எழுதியவர் Venkatalakshmi V
Oct 30, 2026
01:34 pm

செய்தி முன்னோட்டம்

பாலிவுட் நடிகை சாரா அலி கான் தனது புதிய திரைப்படமான 'உட்தா தீர்' வெளியீட்டைத் தொடர்ந்து, உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற கேதார்நாத் சிவன் கோயிலுக்கு அண்மையில் சென்று வழிபாடு நடத்தினார். இந்நிலையில், அவரது இந்த ஆன்மீக பயணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த இஸ்லாமிய மதபோதகர் மௌலானா முஃப்தி சஹாபுதீன் ரஸ்வி, ஃபத்வா பிறப்பித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கண்டனம்

'ஷரீஅத் சட்டத்திற்கு எதிரானது'

சாரா அலி கான் கேதார்நாத் கோயிலில் பூஜை மற்றும் ஆரத்தியில் பங்கேற்றதை சுட்டிக்காட்டிய மௌலானா முஃப்தி சஹாபுதீன், இஸ்லாமிய ஷரீஅத் சட்டம் பிற மத வழிபாட்டு முறைகளில் ஈடுபடுவதை அனுமதிப்பதில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.

பிற மத வழிபாட்டுத் தலங்களுக்கு சென்று வழிபாடு நடத்துவது இஸ்லாத்தில் 'ஹராம்' மற்றும் தடுக்கப்பட்ட செயலாகும்.

தன்னிச்சையாகவே இத்தகைய வழிபாடுகளில் ஈடுபட்டிருந்தால், சாரா அலி கான் அல்லாவிடம் குற்ற உணர்வுடன் மன்னிப்பு கோர வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

உறுதிமொழி

பத்ரி-கேதார் வாரியத்தின் உறுதிமொழிப் பத்திரம்

முன்னதாக, இந்து அல்லாதவர்கள் கேதார்நாத் மற்றும் பத்ரிநாத் கோயில்களுக்கு வர வேண்டுமென்றால், சனாதன தர்மத்தில் நம்பிக்கை இருப்பதாகக் கூறி உறுதிமொழிப் பத்திரம் சமர்ப்பிக்க வேண்டும் என்று பத்ரி-கேதார் கோயில் வாரியம் தெரிவித்திருந்தது.

அதன்படி, சாரா அலி கானின் குழுவினர் உரிய உறுதிமொழிப் பத்திரத்தை சமர்ப்பித்த பின்னரே வழிபாட்டிற்கு அனுமதிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர் சர்ச்சைகள் எழுந்தபோதிலும், தான் முதன்மையாக ஓர் 'இந்தியன்' என்பதில் உறுதியாக இருப்பதாக பேட்டிகளில் சரா அலி கான் தெரிவித்துள்ளார்.

ஈத், கணேஷ் சதுர்த்தி மற்றும் கிறிஸ்துமஸ் உள்ளிட்ட அனைத்து பண்டிகைகளையும் கொண்டாடுவதாகவும், தனது ஆன்மீக மற்றும் மத தேர்வுகளுக்காக யாரிடமும் மன்னிப்பு கேட்கப் போவதில்லை என்றும் அவர் முன்பு கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT