யார் இந்த சாத்வி சைல்? ஃபெமினா மிஸ் இந்தியா 2026 பட்டத்தை வென்ற கோவா அழகி!
செய்தி முன்னோட்டம்
ஒடிஷாவின் புவனேஸ்வரில் உள்ள KIIT வளாகத்தில் கோலாகலமாக நடைபெற்ற 61-வது ஃபெமினா மிஸ் இந்தியா போட்டியில், கோவாவை சேர்ந்த சாத்வி சைல் 'மிஸ் இந்தியா வேர்ல்ட் 2026' பட்டத்தை வென்று மகுடம் சூடினார். நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்திருந்த பல அழகிகளை பின்னுக்குத் தள்ளி, சாத்வி சைல் இந்த வரலாற்று வெற்றியைப் பதிவு செய்துள்ளார். மிஸ் இந்தியா போட்டியில் இரண்டாம் இடத்தில் மகாராஷ்ட்ராவை சேர்ந்த ரஜினந்தினி பவார் மற்றும் மூன்றாம் இடத்தில் ஜம்மு காஷ்மீரை சேர்ந்த ஸ்ரீ அத்வைதா ஆகியோரும் வெற்றி பெற்றனர்.
விவரங்கள்
யார் இந்த சாத்வி சைல்?
கோவாவின் ஒரு சிறிய ஊரில் வளர்ந்த சாத்வியின் பயணம் மிகவும் உத்வேகம் அளிக்கக்கூடியது. பொருளாதாரத்தில் இளங்கலைப் பட்டம் பெற்ற அவர், சர்வதேச உறவுகள் மற்றும் உலகளாவிய விவகாரங்களில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். செவித்திறன் மற்றும் பேச்சுத்திறன் குறைபாடுள்ள குழந்தைகளின் ஊட்டச்சத்து மற்றும் உள்ளடக்கிய கல்விக்காகச் சாத்வி தன்னை அர்ப்பணித்துக்கொண்டுள்ளார். இதுவே அவரது 'அழகு மற்றும் நோக்கம்' (Beauty with Purpose) திட்டத்தின் முக்கிய அம்சமாகும். பிரபல நடுவர் குழுவின் முன்னிலையில் நடைபெற்ற இந்த விழாவில், ஃபெமினா மிஸ் இந்தியா 2025 வெற்றியாளர், புதிய மகுடத்தைச் சாத்வி சைலுக்குச் சூட்டினார். இந்தப் போட்டியின் மூலம் சாத்வி சைல், உலக அழகிப் போட்டியில் (Miss World) இந்தியாவின் சார்பில் பங்கேற்கும் தகுதியைப் பெற்றுள்ளார்.