கூலி படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பில் கலந்து கொள்ள ராஜஸ்தான் சென்றார் ரஜினி
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், லோகேஷ் கனகராஜுடன் முதல்முறையாக இணைந்துள்ள படம் கூலி. இப்படமும் லோகேஷ் கனகராஜ் பணியில் ஒரு கேங்ஸ்டர் படமாக உருவாகி வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. படப்பிடிப்பின் பெரும்பகுதி சென்னை மற்றும் விசாகப்பட்டினத்தில் முடிந்துள்ள நிலையில், அடுத்தகட்ட படப்பிடிப்பு ஜெய்ப்பூரில் நடைபெறவுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இதற்காக சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் இன்று காலை சென்னையிலிருந்து விமானம் மூலம் புறப்பட்டார். அப்போது செய்தியாளர்கள் அவரிடம் திருவண்ணாமலையில் நிலச்சரிவில் 7 பேர் இறந்தது குறித்து அவரிடம் கேட்டனர். அந்த கேள்விக்கு முதலில் அதிர்ச்சியடைந்த ரஜினி, பின்னர் 'சாரி' எனக்கூறி விட்டு விரைந்தார். இந்த வீடியோ தற்போது பேசுபொருள் ஆகியுள்ளது.
Twitter Post
திடீர் கேள்விகளால் ஷாக் ஆகும் ரஜினி
ரஜினியிடம் இது போன்ற கேள்விகள் கேட்பது முதமுறை அல்ல. முன்பும் இதேபோல தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் கேட்கப்பட்டது, அதற்கு அவர் பதில் கூறியது வைரலானது. இதற்கிடையே, ரஜினியின் பிறந்தநாள் வரும் டிசம்பர் 12 ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. இந்த நாளன்று கூலி படத்தின் சிறப்பு அறிவிப்பு வெளியாகக்கூடும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு ஜெயிலர் 2 படத்தின் அப்டேட்டும் வெளியாகும் என செய்திகள் கூறுகின்றன. கூலி படத்தில் ரஜினிகாந்த் உடன் நாகார்ஜுனா, உபேந்திரா, ஸ்ருதிஹாசன், சௌபின் பஷீர், சத்யராஜ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்க, சன் பிக்சர்ஸ் பேனரில் தயாராகிறது. அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்கிறார். இப்படம் மே 2025 இல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.