ரஜினியும், ஆன்மீகமும்: ரஜினிகாந்தின் ஆன்மீக பயணம் துவங்கியது எப்படி? ஒரு ரிவைண்ட் விசிட்
சினிமாவில் பலரும் தெய்வீக நம்பிக்கைகளுடன் நெற்றியில் பட்டை, கையில் பல நிறங்களில் திருஷ்டி கயிறுகள், ராசி மோதிரம் அணிந்திருப்பதை நாம் பார்த்திருப்போம். பலர் படம் ரிலீஸ் ஆகும் நேரத்தில் கோவில் கோவிலாக சென்று சாமி தரிசனம் செய்வதும், அதன்பின்னர் பத்திரிகையாளர்களிடம் உரையாற்றும் போது படத்தை பற்றி விளம்பரம் செய்வதும் வாடிக்கையாக வைத்துள்ளனர். ஆனால், சினிமா போலவே ஆன்மீகம் என்பதும் மதம் சார்ந்தது அல்ல என்பதை தங்கள் செயலில் காட்டுபவர்கள் ஒரு சிலரே. அவர்களுள் முன்னோடி ரஜினிகாந்த் என்றால் அது மிகையாகாது. தன்னுடைய ஆன்மீக பாதையினை சுய-விளம்பரத்திற்காக பயன்படுத்தாமல், தன்னுடைய மனநிம்மதிக்காக மட்டுமே கடைப்பிடிப்பதில் ரஜினி 'சூப்பர்ஸ்டார்' தான்! அவருடைய ஆன்மீக பாதை துவங்கியது எப்படி?
ரஜினியின் ஆன்மீக பாதையின் ஆரம்பம்
ரஜினிகாந்த், சிறுவயதில் இருந்து ஸ்ரீ ராகவேந்திரர் மீது ஈர்க்கப்பட்டு, அவரை வழிபட்டு வருகிறார். இதனாலேயே அவரது கையில் ஸ்ரீ ராகவேந்திரரின் காப்பு அணிவதை வழக்கமாக வைத்துள்ளார். அதோடு, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரரையும் வழிபடுவது அவரது ஆன்மீக பயணத்தில் முக்கியமான தேர்வாக இருந்தது. அதன் காரணமாகவே அவர் 'ஸ்ரீ ராகவேந்திரர்' என்ற படத்தையும், 'அருணாச்சலம்' படத்தின் கதையையும் தேர்வு செய்தார் என பல இடங்களில் அவர் கூறியதை கேட்டிருக்கலாம். ராகவேந்திரர் படத்தில், அவர் சுவாமி ராகவேந்திரராகவே வாழ்ந்திருப்பார். அதேபோல அருணாச்சலம் படத்திற்கும் ஆரம்பத்தில் தேர்வு செய்த பெயர் வேறாக இருக்க, இப்படத்தின் டைட்டில்-ஐ சஜஸ்ட் செய்தவர் ரஜினி தானாம்.
பாபாஜி-ஐ குருவாக ஏற்று கொண்டு தொடங்கிய இமய பயணம்
"ஒரு யோகியின் சுயசரிதை" புத்தகத்தை படித்ததில் மூலம் அவர் பாபாஜியின் போதனைகளால் ஈர்க்கப்பட்டார். அதோடு, கிரியா யோகா தியானத்தை மேற்கொள்ள துவங்கினார். 1998ஆம் ஆண்டு, விஸ்வநாதன் ஸ்ரீ ஹரியின் மூலம், ரஜினிகாந்த் பாபா குகைக்குச் சென்றார். அங்கே சென்றதும் அவருக்கு ஏற்பட்ட அனுபவம் அவரை மகா அவதார் பாபாஜி-ஐ தன்னுடைய ஆன்மீக வழிகாட்டியாக ஏற்றுக்கொள்ள வைத்தது. அதன் வெளிப்பாடு தான் அவருடைய கதையை 'பாபா' திரைவடிவம் பெற்றது. அதன் பின்னர் ஆண்டுதோறும் அவர் பாபாஜி குகைக்கு செல்வதை வழக்கமாக வைத்துள்ளார். இடையே அவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்ட போது மட்டுமே அவரால் இமயமலைக்கு செல்ல முடியவில்லை. அதன் பின்னர் இந்த ஆண்டு மே மாதம் அவர் மீண்டும் இமயமலைக்கு சென்று வந்தார்.
AR ரஹ்மானுடன் தர்காவிற்கு சென்ற ரஜினிகாந்த்
ரஜினிகாந்த் மற்ற மத வழிபட்டு ஸ்தலங்களுக்கும் செல்கிறார். கடந்த 2022 ஆம் ஆண்டு திருப்பதிக்கு சென்றவர், திரும்பும் வழியில் கடப்பாவில் உள்ள ஒரு தர்காவிற்கு ஏ.ஆர். ரஹ்மான் உடன் சென்றார். அந்த வீடியோ அப்போது வைரலானது. இது போக அவர் கேதார்நாத், பத்ரிநாத் போன்ற புனித ஸ்தலங்களுக்கும், அயோத்தியா ராமர் கோவிலின் திறப்பு விழாவிற்கும், வியாசர் குகை, பாப்ஸ் இந்து மந்தீர் உள்ளிட்ட மத வழிபாடு ஸ்தலங்களுக்கும் அவர் சென்று வருகிறார். ரஜினி தன்னுடைய அரசியல் நுழைவின் போது கூட ஆன்மீக அரசியலை முன்னெடுப்பதாகவே கூறினார். சூப்பர்ஸ்டாரின் திரைப்படங்கள் மட்டுமல்ல அவருடைய ஆன்மீக வழியும் கூட 'என் வழி..தனி வழி தான்'!