தனியார் ஓடிடி நிறுவனங்களுக்கு போட்டி; வேவ்ஸ் என்ற புதிய ஓடிடியை அறிமுகம் செய்தது பிரசார் பாரதி
செய்தி முன்னோட்டம்
இந்தியாவின் மத்திய அரசின் பொது ஒளிபரப்பு நிறுவனமான பிரசார் பாரதி தனது புதிய ஓடிடி ஸ்ட்ரீமிங் தளமான வேவ்ஸ்'ஐ (WAVES) கோவாவில் நடைபெறும் இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் (IFFI) வெளியிட்டது.
இந்த வெளியீடு நாட்டின் போட்டி நிறைந்த ஓடிடி ஸ்ட்ரீமிங் சந்தையில் பிரசார் பாரதியின் நுழைவைக் குறிக்கிறது.
வேவ்ஸ் 12க்கும் மேற்பட்ட மொழிகளிலும், வீடியோ ஆன் டிமாண்ட் உள்ளடக்கம், இலவச கேமிங், ரேடியோ ஸ்ட்ரீமிங் மற்றும் 65 லைவ் சேனல்கள் உட்பட 10க்கும் மேற்பட்ட வகைகளிலும் பலதரப்பட்ட உள்ளடக்கத்தை வழங்குகிறது.
மற்ற ஸ்ட்ரீமிங் சேவைகளில் இருந்து தன்னைத் தனித்துக் காட்டும் முயற்சியாக, வேவ்ஸ் டிஜிட்டல் வர்த்தகத்திற்கான ஓபன் நெட்வொர்க்குடன் (ONDC) இணைந்து இ-காமர்ஸ் திறன்களைச் சேர்த்துள்ளது.
சந்தா
வேவ்ஸ் ஓடிடி தளத்திற்கு சந்தா கிடையாது
வேவ்ஸ் ஓடிடி தளத்தில், பிரசார் பாரதியின் சேனல்கள் தவிர, பி4யு, எஸ்ஏபி குழுமம் மற்றும் 9எக்ஸ் மீடியா போன்ற பொழுதுபோக்கு நெட்வொர்க்குகள் உட்பட 38 நேரடி சேனல்களின் வரிசையை கொண்டிருக்கும்.
இது என்டிடிவி இந்தியா, ஏபிபி நியூஸ், நியூஸ்24, ரிபப்ளிக், நியூஸ் நேஷன் மற்றும் இந்தியா டுடே உள்ளிட்ட ஏராளமான செய்தி சேனல்களையும் கொண்டுள்ளது.
முன்னதாக, இந்த ஆண்டின் தொடக்கத்தில், பிரசார் பாரதி தனது புதிய ஓடிடி தளத்தில் சேர இந்தியாவின் தொலைகாட்சி சேனல்களுக்கு அழைப்பு விடுத்தது.
இதில் இணையும் ஒளிபரப்பாளர்களுக்கு விளம்பர வருவாயில் 65 சதவீதம் கொடுக்கப்படும். மீதமுள்ள 35 சதவீதத்தை பிரசார் பாரதி வைத்துக் கொள்ளும். இதற்கிடையே, பயனர்கள் இந்த தளத்தில் இணைய சந்தா எதுவும் செலுத்த தேவையில்லை.