'இசையமைப்பாளர் இளையராஜா எல்லோருக்கும் மேலானவர் அல்ல': சென்னை உயர் நீதிமன்றம் 'நறு'க்கென கொட்டு
இளையராஜாவின் பாடல்கள் காப்புரிமை வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் முன்னதாக இளையராஜா தரப்பு வழக்கறிஞர்,"நான் எல்லோருக்கும் மேலானவன் தான். வீம்புக்காக இதனைச் சொல்வதாக நினைக்க வேண்டாம்" என தெரிவித்திருந்தார். இதற்கு நேற்று கருத்து தெரிவித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி மகாதேவன் கூறினார்: "இசை மும்மூர்த்திகளான முத்துசாமி தீக்ஷிதர், தியாகராஜர் மற்றும் சியாமா சாஸ்திரிகள் எல்லோருக்கும் மேலானவர்கள் என்று கூறலாம், ஆனால் நீங்கள் (இளையராஜா) அவ்வாறு கூறுவதைக் கேட்க முடியாது." என்றார். இளையராஜாவின் வழக்குரைஞர் ஏ.சரவணன், இந்த வழக்கில் தனது சீனியர் வக்கீல் கூறியது தவறாக எடுத்துக்கொள்ளப்பட்டது என தெளிவுபடுத்த முயன்றார்.
"அந்த அர்த்தத்தில் கூறவில்லை": இளையராஜா தரப்பு
முன்னதாக பதிப்புரிமை பின்னணியில் மட்டுமே அவ்வாறு கூறியதாகவும், எக்கோ ரெக்கார்டிங் பிரைவேட் லிமிடெட் இந்த உரிமையை கேள்விக்குள்ளாக்கியதால் அவர் இசையமைத்த பாடல்கள் மீது இளையராஜாவின் உரிமையை வலியுறுத்துவதாகவும் கூறினார். "பத்திரிகைகள் இதை வேறு ஒரு சூழலில் எடுத்துக்கொண்டன. அவர் (இளையராஜா) அப்படிப்பட்டவர் என்று தன்னை ஒருபோதும் பிரகடனப்படுத்துவதில்லை என்பது உங்கள் திருவருளுக்குத் தெரியும். அவருடைய உரிமையின் அடிப்படையில்தான் மூத்த வழக்கறிஞர் பராசரன் அந்த அறிக்கையை வெளியிட்டார்" என்று அவர் கூறினார். இந்த வழக்கின் விசாரணை தற்போது ஏப்ரல் 24 க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. காப்புரிமை தராமல் தனது பாடல்களைப் பயன்படுத்தக்கூடாது என இசை நிறுவனங்களுக்கு எதிராக இளையராஜா வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கின் மேல்முறையீடு மீதான விசாரணை தற்போது நடைபெற்று வருகிறது.