பொதுவெளியில் ரஜினியும் கமலும் நட்பு பாராட்டி நம்மை மகிழ்வித்த சில தருணங்களின் தொகுப்பு
ரஜினியும், கமலும் தங்கள் நட்பினால் நம்மை ஆச்சரியப்படுத்திக்கொண்டிருக்கிறார்கள். ஒரே துறையில் வாழும் இரு பெரும் ஜாம்பவான்கள், ஈகோ எதுவும் இல்லாமல், தனிப்பட்ட வாழ்க்கையிலும், பொது வெளியிலும் தங்கள் நட்பை வெளிக்காட்ட தவறியதே இல்லை. இரு நடிகர்களின் ரசிகர்கள் ஆரம்பகாலத்தில் இது புரியாமல் தங்களுக்குள் மோதிக்கொண்டாலும், இவர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் துணையாக நிற்க தவறியதே இல்லை. எந்த சூழலிலும், இருவரும் ஒருவொருக்கொருவர் துணையாக நின்றுள்ளனர். ரஜினியின் பிறந்தநாள் ஸ்பெஷலாக இவர்கள் இருவரும் பொதுவெளியில் அன்பை பகிர்ந்துக்கொண்ட தருணங்களின் தொகுப்பு இதோ:
வேட்டையன்- இந்தியன் 2 படப்பிடிப்பு தளம்
இந்த ஆண்டின் துவக்கத்தில் சென்னையின் பிரபல ஸ்டூடியோ ஒன்றில் ஒரு தளத்தில் ரஜினியின் 'வேட்டையன்' படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது. அதே தளத்தில் கமல்ஹாசனின் இந்தியன் 2 படப்பிடிப்பும் நடைபெற்று கொண்டிருந்தது. தன்னுடைய நண்பரின் படப்பிடிப்பும் அங்கேயே நடைபெறுவதை அறிந்த ரஜினி, இயக்குனரிடம் கேட்டுக்கொண்டு சர்ப்ரைஸாக கமல்-ஐ நேரில் சென்று சந்தித்தார். அந்த வீடியோ அப்போது வெளியாகி வைரலானது. கே.பாலச்சந்தரின் பள்ளியில் இருந்து வந்த இருவரும் 40 ஆண்டுகள் கடந்தும் அதே பாசத்துடன் இருப்பதை பார்த்து ரசிகர்கள் அந்த தருணத்தில் வியந்துதான் போனார்கள்.
பொன்னியின் செல்வன் டிரெய்லர் மற்றும் ஆடியோ வெளியீட்டு விழா
'பொன்னியின் செல்வன்' விழாவில், படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல்களைத் தவிர, மக்கள் ஆரவாரம் செய்தது எதற்காகவென்றால், அது ரஜினியும், கமலும் ஒருசேர மேடையில் தோன்றிய அந்த தருணத்தை பார்க்கத்தான். மேடையில் பேச்சைத் தொடங்கவிருந்த ரஜினி, கமலிடம் பார்வையாளர்களுடன் அமர விரும்புகிறீர்களா என்று கேட்டபோது, அவர் தனது நண்பருடன் நின்று கேட்க விரும்புவதாகக் குறிப்பிட்டார். இருவரும் ஒவ்வொருவருக்கும் இருக்கும் பரஸ்பர மரியாதையை வெளிக்காட்டி கொண்ட விதம் மெய்சிலிர்க்கவைத்தது. அதே மேடையில் ரஜினி, தனது பொழுதுபோக்கு உரையில், தளபதியின் படப்பிடிப்பின் போது, மணிரத்னத்தின் இயக்கத்தை எவ்வாறு கையாள்வது என்பது குறித்த ஆலோசனையுடன் கமல் தனக்கு எவ்வாறு உதவினார் என்பதையும் வேடிக்கையாக வெளிப்படுத்தினார்.
கமல் 60 விழா மேடை
இந்நிகழ்ச்சியில், தனக்குள் இருக்கும் கமல் ரசிகனை வெளிப்படுத்திய ரஜினி, தனக்குள் இருக்கும் கமல் ரசிகனை நினைவு கூர்ந்து, சிறுவயதில் 'களத்தூர் கண்ணம்மாவை' பார்த்த நினைவலைப் பற்றிப் பேசியதோடு, உலகநாயகனை தான் எப்போதும் போற்றுவதாகவும் தெரிவித்தார். 43 வருடங்களாக தங்களுடைய நட்பை நீடித்தது ஒருவருக்கு ஒருவர் மேல் இருக்கும் காதல் என்று அப்போது கமலும் அதனை ஆமோதித்தார்.
விகடன் விருது விழா
2017 ஆண்டு நடைபெற்ற விகடன் விருதுகள் விழாவில், கமலுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்க முடிவெடுக்கப்பட்டது. ஆனாலும் அவருக்கு அதை வழங்குவதற்கு தகுதியான ஆள் என யோசனையின்றி அனைவரின் மனதில் தோன்றிய ஒரே பெயர் ரஜினிகாந்த் தான். அவரும் அந்த கோரிக்கையை பெருந்தன்மையுடன் ஏற்றுக்கொண்டு கமலுக்கு விருது வழங்கினார். இந்த விழாவிலும், இருவரும் பரஸ்பர அபிமானத்தால் பார்வையாளர்களை ஆச்சரியப்படுத்தினார்கள். அதன் தொடர்ச்சியாக எடுக்கப்பட்ட புகைப்படங்களில், இருவரின் கேண்டிட் புகைப்படங்களே அவர்கள் இருவரும் கொண்டிருக்கும் நட்பின் சாட்சியாக சிறப்பாகப் படம் பிடிக்கப்பட்டது.
கமலின் புதிய அலுவலக திறப்பு விழா
நவம்பர் 8, 2019 அன்று, ரஜினிகாந்த் கமல்ஹாசனின் புதிய அலுவலகத்தைத் திறந்து வைத்தார். அதோடு வளாகத்தில் அவர்களின் வழிகாட்டியான கே பாலச்சந்தரின் மார்பளவு சிலையையும் அவர் திறந்து வைத்தார். இரண்டு சூப்பர்ஸ்டார்களும் அந்த இடத்தின் மொட்டை மாடியில் இருந்து ரசிகர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் வைரலாக மாறியது. மேலும் ரசிகர்கள் இந்த நட்பை எம்.ஜி.ஆர் மற்றும் கலைஞரின் நட்புடன் ஒப்பிடத் தொடங்கினர்.