ஓட்டுநர் உரிமம் வாங்கிய மஞ்சு வாரியர்; அஜித்துடன் பைக் டூரில் இணைகிறார்
நடிகை மஞ்சு வாரியர் தற்போது இரு சக்கர வாகன ஓட்டுநர் உரிமம் வாங்கியுள்ளார். அந்த செய்தி இணையத்தில் பரவ ஆரம்பித்ததும், அவர், அஜித்துடன், பைக் பயணம் செல்ல தயாராக போகிறார் என செய்திகள் உலா வர ஆரம்பித்துள்ளது. அதை பற்றிய சிறு குறிப்பு: மஞ்சு வாரியரும், அஜித்தும் இணைந்து நடித்த 'துணிவு' படம், பொங்கல் பண்டிகையை ஒட்டி வெளியானது. இந்த படத்தில், மஞ்சு வாரியரின் நடிப்பு, அனைவராலும் பாராட்டப்பட்டது. இந்த 'துணிவு' படத்தின் படப்பிடிப்பின் பொழுது, அஜித்குமார், இந்தியா முழுவதும் பைக் பயணம் சென்றது அனைவரும் அறிந்ததே. ஆனால் அந்த பயணத்தின் போது, சில நாட்கள் அவருடன், மஞ்சு வாரியாரும் சென்றுள்ளார். இது பற்றி தனது சமூக வலைத்தளத்திலும் மஞ்சு பதிவிட்டிருந்தார்.
அஜித்துடன் பைக் பயணம்
துணிவு படக்குழுவினருடன் பைக் சவாரி செய்த மஞ்சு வாரியர்
"நாங்கள் பாங்காங் ஏரி மற்றும் லுப்ரா பள்ளத்தாக்கு மற்றும் இமயமலைக்கு சென்றோம். சுமார் 45 கிலோமீட்டர் தூரத்திற்கு ஆஃப் ரோடிங்கும் செய்தோம். சில நேரங்களில் உணவு ஒரு போராட்டமாக இருந்தது. ஆனால் அது ஒரு சிறந்த அனுபவமாக இருந்தது." என்று அவர் மேலும் தெரிவித்திருந்தார். அஜித்துடன் பயணித்தது குறித்து ஒரு பேட்டியில் கூறிய மஞ்சு வாரியர், விரைவில் தானும் ஒரு BMW ஸ்போர்ட்ஸ் பைக் வாங்கும் எண்ணம் இருப்பதாகவும் தெரிவித்து இருந்தார். தற்போது ஓட்டுநர் உரிமம் பெற்றதனால், விரைவில் BMW பைக் வாங்குவர் என்றும், அஜித்துடன் உலக பயணம் போகவும் வாய்ப்புள்ளது என்றும் அவரது ரசிகர்கள் கூறிவருகின்றனர்.