பொன்னியின் செல்வன் படத்தில் உருவான மத சர்ச்சைகளுக்கு பதிலளித்த மணிரத்னம்
லைகா நிறுவனமும், மெட்ராஸ் டாக்கீஸ்சும் இணைந்து தயாரித்த திரைப்படம் பொன்னியின் செல்வன். இரண்டு பாகங்களாக எடுக்கப்பட்ட இந்த திரைப்படத்தின் முதல் பாகம் சென்ற ஆண்டு வெளியானது. மணிரத்னம் இயக்கத்தில் உருவான அந்த திரைப்படம் மிகப்பெரும் வெற்றி அடைந்ததை தொடர்ந்து, தற்போது அதன் இரண்டாம் பாகம், இன்னும் 10 நாட்களில், அதாவது ஏப்ரல் 28 அன்று உலகம் முழுவதும் வெளியாகவிருக்கிறது. இந்நிலையில் படத்திற்கான ப்ரோமோஷன் வேளைகளில் படக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். முதற்கட்டமாக சென்ற சனிக்கிழமை (ஏப்ரல் 15) அன்று, சென்னை அண்ணா யூனிவர்சிட்டி வளாகத்தில், PS2 படத்திற்கான Anthem-ஐ வெளியிட்டார் படத்தின் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான். அதனை தொடர்ந்து படக்குழு, கோயம்பத்தூருக்கு ஏப்ரல் 17 அன்று சென்றார்கள்.
சென்னையில் நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பு
அதன்பிறகு, நேற்று, ஏப்ரல் 17, சென்னையில் பத்திரிக்கையாளர் சந்திப்பு நிகழ்ந்தது. அதில் படத்தின் முக்கிய நாயகர்களான விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, திரிஷா, ஷோபிதா துலிபாலா, ஐஸ்வர்யா லக்ஷ்மி ஆகியோர் கலந்து கொண்டனர். இவர்களுடன், படத்தின் இயக்குனர் மணிரத்தினமும் கலந்து கொண்டார். பத்திரிகையாளர்கள் கேள்விகளுக்கு சுவாரசியமாக பதில் அளித்தனர் படக்குழுவினர். அப்போது, மணிரத்தினத்திடம், இந்த திரைப்படத்திற்கு மத சாயம் பூசப்படுவது குறித்து கருத்து கேட்கப்பட்டது. PS1 வெளியானபோது, பிரிவினைவாதிகள் சர்ச்சைகளை ஏற்படுத்தியது நினைவிருக்கலாம். அதற்கு மணிரத்னம், "பொன்னியின் செல்வன் படத்தில் மதத்தை ஏன் நுழைக்கிறீர்கள்? கல்கி எழுதியதை வைத்து உருவாக்கிய படம் இது. ராஜராஜ சோழனின் சாதனைகளை நாம் கொண்டாட வேண்டும். பொன்னியின் செல்வன் தொடர்பாக அனாவசியமான சர்ச்சைகள் தேவையற்றவை" எனக்கூறினார்.