குணா படத்தின் ரீ-ரிலீசிற்கு விதித்த தடை நீக்கம்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
1991ம் ஆண்டு, கமல்ஹாசனின் நடிப்பில் வெளியான 'குணா' திரைப்படத்தை ரீரிலீஸ் செய்ய விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீக்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 'மஞ்சும்மேல் பாய்ஸ்' என்ற மலையாள திரைப்படத்தில் குணா பாடல் இடம்பெற்றிருந்தது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், அப்படத்தை மீண்டும் ரீ-ரிலீஸ் செய்ய தயாரிப்பு நிறுவனமான பிரமிட் ஆடியோ குழுமம் முயற்சித்தது. அப்போது, அதன் பதிப்புரிமையை தான் வாங்கியுள்ளதால் ரீரிலீஸ் செய்ய தடை கோரி கன்ஷியாம் ஹேம்தேவ் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தின் தனி நீதிபதி படத்தை வெளியிட இடைக்காலத்தடை பிறப்பித்திருந்தார்.
உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்த தயாரிப்பாளர்கள்
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி விதித்த உத்தரவை எதிர்த்து, மேல்முறையீடு செய்திருந்தனர் குணா படத்தின் தயாரிப்பாளர்கள். இந்த வழக்கில், படத்திற்கான பதிப்புரிமை காலம் 2013ம் ஆண்டுடன் முடிவடைந்துவிட்டதால், ரீரிலீஸ் செய்ய தடை கோர முடியாது என தயாரிப்பு நிறுவனங்களான பிரமிட், எவர்கிரீன் நிறுவன தரப்பு வாதம் செய்தனர். இதனை ஏற்றுக்கொண்ட அமர்வு நீதிமன்றம், படத்தை ரீரிலீஸ் செய்ய விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீக்கினர்.