10 நாட்களில் ரூ.54.9 கோடி வசூல்: மாமன்னனின் வெற்றி பயணம்
இந்தியத் திரையுலகில் சமீப காலமாக அதிக தமிழ் படங்கள் வெற்றி பெற்று வருகின்றன. பெரிய பட்ஜெட்டில் தயராகும் படங்களை விட, மாறுபட்ட கதைக்களத்துடன் வெளியாகும் குறைந்த பட்ஜெட் திரைப்படங்களுக்கு அதிக வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில், சமீபத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, கீர்த்தி சுரேஷ், ஃபஹத் பாசில் ஆகியோர் நடித்து வெளியாகிய மாமன்னன் திரைப்படம் வணிகரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் பெரும் வெற்றி பெற்றுள்ளது. பரியேறும் பெருமாள், கர்ணன் ஆகிய திரைப்படங்களை இயக்கிய மாரி செல்வராஜ் இந்த படத்தையும் இயக்கி இருக்கிறார். ஏ.ஆர்.ரகுமான் இதற்கு இசை அமைத்திருக்கிறார். இந்நிலையில், ரூ.35 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட இப்படத்தின் வசூலை தயாரிப்பாளரும் நடிகருமான உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.
தமிழகத்தில் மட்டும் 42 கோடி ரூபாய் வசூல்
நேற்று சென்னை தேனாம்பேட்டையில் உள்ள ஒரு தனியார் நட்சத்திர ஹோட்டலில் மாமன்னன் வெற்றிக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி நடத்தபப்ட்டது. இந்த நிகழ்ச்சியில், உதயநிதி ஸ்டாலின், நடிகர் வடிவேலு, இயக்குநர் மாரி செல்வராஜ், நடிகை கீர்த்தி சுரேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த வெற்றி கொண்டாட்டத்தின் போது உரையாற்றிய உதயநிதி ஸ்டாலின், "மாமன்னன் திரைப்படம் 9 நாடகளில் 52 கோடி ரூபாய் வசூலித்தது" என்று தெரிவித்துள்ளார். மேலும், இத்திரைப்படம் 10 நாட்களில் 54.9 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. தான் நடித்த திரைப்படங்களிலேயே இந்த திரைப்படத்திற்கு தான் அதிக வசூல் கிடைத்துள்ளது என்றும் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். இந்நிலையில், வரும் 14ஆம் தேதி இத்திரைப்படம் தெலுங்கு மொழியிலும் வெளியாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.