நடிகர் சல்மான் கானை கொல்ல திட்டமிட்ட கும்பல்: துப்பாக்கிச்சூடு நடத்திய 4 பேர் கைது
சிறையில் அடைக்கப்பட்டுள்ள லாரன்ஸ் பிஷ்னோயின் கும்பல் பாலிவுட் நடிகர் சல்மான் கானை மகாராஷ்டிரா மாநிலம் பன்வெல்லில் உள்ள அவரது பண்ணை வீட்டின் அருகே அவரது காரை நிறுத்தி ஏகே 47 துப்பாக்கியால் சுட்டுக் கொல்ல திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக துப்பாக்கி சூடு நடத்திய பிஷ்னோய் கும்பலைப் பன்வெல் போலீஸார் கைது செய்துள்ளனர். துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் அஜய் காஷ்யப் என்ற தனஞ்சய் தப்சிங்; நஹ்வி என்கிற கௌரவ் பாட்டியா; வாசிம் சிக்னா என்ற வாஸ்பி கான்; மற்றும் ஜாவேத் கான் என்கிற ரிஸ்வான் கான் என அடையாளம் காணப்பட்டனர்.
கோல்டி ப்ரார் என்ற ரவுடிக்கும் இதில் சம்பந்தம்
அஜய் காஷ்யப், பாகிஸ்தானில் உள்ள டோகா என்ற ஆயுத வியாபாரியுடன் M16, AK-47 மற்றும் AK-92 ரக துப்பாக்கிகளை வாங்குவதற்காக தொடர்பில் இருந்ததாக விசாரணையின் போது தெரியவந்துள்ளது. அந்த நான்கு பேரும் நடிகர் சல்மான் கானை வெற்றிகரமாக கொன்றுவிட்டால், குண்டர்கள் லாரன்ஸ் பிஷ்னோய் மற்றும் கோல்டி ப்ரார் ஆகியோர் சல்மான் கானை கொன்றவர்களுக்கு பெரும் தொகையை வழங்க இருந்தனர் என்றும் விசாரணையில் தெரியவந்துள்ளது. கடந்த ஏப்ரல் 14 ஆம் தேதி மும்பையின் பாந்த்ரா பகுதியில் உள்ள சல்மான் கானின் வீட்டிற்கு வெளியே பைக்கில் வந்த இருவர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். அது நடந்து ஒரு மாதத்திற்கு பிறகு இந்த சம்பவம் நடந்துள்ளது