கட்டணச் சேவையாக மாறும் ஜியோ சினிமா.. எவ்வளவு கட்டணம்?
உலகக்கோப்பைக் கால்பந்து தொடரைத் தொடர்ந்து, ஐபிஎல் தொடரையும் இலவசமாக வழங்கி வருகிறது ஜியோ சினிமா தளம். இந்த ஐபிஎல் தொடர் முடிந்த பின்பு, ஜியோ சினிமாவை கட்டணச் சேவையாக மாற்ற திட்டமிட்டிருக்கின்றனர். மேலும், வாடிக்கையாளர்களைக் கவர்வதற்காக பல்வேறு புதிய முயற்சிகளையும் அந்நிறுவனம் எடுத்து வருகிறது. இந்நிலையில், அது எந்த வகையில் கட்டணச் சேவையாக மாறப் போகிறது. எவ்வளவு கட்டணம் நிர்ணயிக்கப்படவிருக்கிறது என்பது குறித்த தகவல்கள் வெளியாகியிருக்கிறது. வயகாம் 18 நிறுவனத்தின் கீழே இயங்கி வருகிறது ஜியோ சினிமா. வூட் (Voot) ஓடிடி தளமும் வயகாம் 18 நிறுவனத்தைச் சேர்ந்ததே. எனவே, மேற்கூறிய இரண்டு தளங்களையும் சேர்த்து ஜியோவூட் என்ற பெயரில் ஒரே தளமாக வெளியிடத் திட்டமிட்டிருக்கிறது வயகாம் நிறுவனம்.
எவ்வளவு கட்டணம்?
தற்போது கிடைத்த தகவலின்படி மூன்று வகையான பிளான்களை அறிமுகப்படுத்தும் திட்டத்தில் இருக்கிறது அந்நிறுவனம். அடிப்படையாக, 2 ரூபாய்க்கு ஒரு நாள் வேலிடிட்ட கொண்ட பிளான் வழங்கப்படுகிறது. ஒரே நேரத்தில் இரண்டு சாதனங்களில் பயன்படுத்த முடியும். இரண்டாவதாக, 3 மாதங்களுக்கு 99 ரூபாய் கட்டணம் செலுத்திப் பயன்படுத்தும் பிளான். இதிலும் ஒரே நேரத்தில் இரண்டு சாதனங்களில், 4K தரத்தில் நிகழ்ச்சிகளைப் பார்க்க முடியும். மூன்றாவதாக, வருடத்திற்கு 599 ரூபாய் கட்டணம் செலுத்திப் பயன்படுத்தும் வசதி. இதில் ஒரே நேரத்தில் நான்கு சாதனங்களில், 4K தரத்தில் நிகழ்ச்சிகளைப் பார்க்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நடப்பு ஐபிஎல் தொடர் முடிவடையும் நேரத்தில் இந்த கட்டண சேவை திட்டத்தை அந்நிறுவனம் அறிமுகப்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.