Loading...
ஜெயிலர் 2: ரஜினிகாந்திடம் மிதுன் சக்ரவர்த்தி விதித்த விசித்திர நிபந்தனை என்ன?
ரஜினிகாந்திடம் மிதுன் சக்ரவர்த்தி விதித்த விசித்திர நிபந்தனை

ஜெயிலர் 2: ரஜினிகாந்திடம் மிதுன் சக்ரவர்த்தி விதித்த விசித்திர நிபந்தனை என்ன?

எழுதியவர் Vasuki
Oct 13, 2026
01:28 pm

செய்தி முன்னோட்டம்

இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள ஜெயிலர் 2 திரைப்படம் வரும் அக்டோபர் 15-ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகத் தயாராகி வருகிறது. கலாநிதி மாறனின் சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த அதிரடித் திரைப்படத்தின் விளம்பர நேர்காணலில் கலந்துகொண்ட ரஜினிகாந்த், இப்படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள தனது நீண்ட கால நண்பரும் பாலிவுட் ஜாம்பவானுமான மிதுன் சக்ரவர்த்தி இப்படத்தில் இணைய சம்மதிப்பதற்கு முன் தனக்கு விதித்த ஒரு சுவாரசியமான நிபந்தனை குறித்து வெளிப்படையாகப் பகிர்ந்துள்ளார்.

மிதுன் நிபந்தனை

"என்னை அடிக்கவும் கூடாது, சுடவும் கூடாது"

நேர்காணலில் பேசிய ரஜினிகாந்த், "மிதுன் எனது மிக நெருங்கிய நண்பர். ஜெயிலர் 2 தயாரிப்புக் குழுவினர் அவரை அணுகியபோது, நான் என்ன வில்லன் கதாபாத்திரத்திலா நடிக்கிறேன்? ரஜினிகாந்திடம் நான் அடிவாங்க வேண்டுமா? போயிட்டு வாங்க என்று ஆரம்பத்தில் மறுத்துவிட்டார்".

"பின்னர் வேவ்ஸ் (WAVES) மாநாட்டின் போது நான் அவரை நேரில் சந்தித்தேன். அப்போது பேச்சு இப்படத்திற்கு வந்தபோது, நீ சொன்னால் நான் கண்டிப்பாக நடிக்கிறேன். ஆனால் எனக்கு ஒரேயொரு நிபந்தனைதான்".

"படத்தில் நீ என்னை அடிக்கவும் கூடாது, துப்பாக்கியால் சுடவும் கூடாது என்று வேடிக்கையாகக் கூறினார். நான் இயக்குநரைக் கேட்டுச் சொல்கிறேன் என்று சிரித்தபடி கூறினேன்" என அந்தச் சுவாரசியமான தருணத்தை நினைவுகூர்ந்தார்.

பான் இந்தியா ட்ரீட்

நட்சத்திரப் பட்டாளத்துடன் தயாராகும் பிரம்மாண்ட படைப்பு

கடந்த 2015-ஆம் ஆண்டு வெளியான "யாகாவாராயினும் நா காக்க" படத்திற்குப் பிறகு பல ஆண்டுகள் கழித்து மிதுன் சக்ரவர்த்தி மீண்டும் தமிழ் சினிமாவுக்குள் நுழைந்துள்ளார்.

1989-ல் பிரஷ்டாச்சார் படத்திற்குப் பின் ரஜினிகாந்துடன் இவர் மீண்டும் இணைந்திருப்பது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இப்படத்தில் ரம்யா கிருஷ்ணன், எஸ்.ஜே. சூர்யா, மோகன்லால், வித்யா பாலன், சூரஜ் வெஞ்சாரமூடு, ஹிருத்திக் ரோஷன், சிவராஜ்குமார் மற்றும் ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்ட முன்னணி இந்திய நட்சத்திரங்கள் இணைந்துள்ளனர்.

அனிருத் இசையமைப்பில் உருவாகியுள்ள ஜெயிலர் 2 படத்தின் இந்த சுவாரசிய பின்னணி தகவல்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி படத்திற்கான எதிர்பார்ப்பை உச்சத்திற்குக் கொண்டு சென்றுள்ளன.

ADVERTISEMENT