இசைஞானியாக தனுஷ்: பூஜையுடன் படப்பிடிப்பு துவக்கம்
தனுஷ் நடிப்பில், அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில், இசைஞானி இளையராஜாவின் வாழ்க்கை திரைப்படமாகவிருக்கிறது. இதற்கான பணிகள் பூஜையுடன் இன்று துவங்கியது. இந்த படபூஜையில் தனுஷ், இளையராஜா ஆகியோருடன் கமல்ஹாசனும் கலந்து கொண்டார். பூஜையின் புகைப்படங்கள் தற்போது வைரலாகி வரும் நிலையில், இந்த படம் குறித்து தனுஷ் பேசியதும் வைரலாகி வருகிறது. "எண்ணம் போல் வாழ்க்கை' என்று நான் அடிக்கடி சொல்வதுண்டு. பல இரவுகளில் நான் இளையராஜா பாடலைக் கேட்டு அவருடைய பயோபிக்கில் நடித்தால் எப்படி இருக்கும் என்று யோசித்து மனதிற்குள்ளேயே நடித்துப் பார்த்திருக்கிறேன். அது இப்போது நடந்திருக்கிறது". "நான் இரண்டு பேரின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டிருக்கிறேன். ஒன்று இளையராஜா சார், மற்றொன்று ரஜினி சார் பயோபிக்".
"கர்வம் கொள்கிறேன்": தனுஷ் பெருமிதம்
"அதில் இளையராஜாவின் பயோபிக்கில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இப்போது நனவாகியிருக்கிறது. இந்த வாய்ப்பு எனக்கு கிடைத்தது மிகப்பெரிய கர்வத்தைக் கொடுக்கிறது". "நான் இளையராஜா சாரோட ரசிகன், பக்தன். அவருடைய இசைதான் எனக்குத் துணை. இது எல்லோருக்கும் பொருந்தும். இதைத் தாண்டி அவரது இசை என் நடிப்பின் ஆசான். அவருடைய இசையைக் கேட்டு அந்த உணர்வை உள்வாங்கிக் கொண்டுதான் நடிப்பேன்". "இது வெற்றிமாறனுக்கு நன்றாகத் தெரியும். இதற்கான அழைப்பு இளையராஜா சாரிடமிருந்து வந்தது இன்னும் மகிழ்ச்சியானது. இசையாகவே, இசை ஞானியாகவே, இசையின் கடவுளாகவே நடிப்பதற்கான வாய்ப்பை அந்த சிவன் எனக்குக் கொடுத்திருக்கிறார்" என நெகிழ்ச்சியுடன் பேசினார்.