தற்காலிக ஒப்பந்தம் ஏற்றுக் கொள்ளப்பட்ட நிலையில், ஹாலிவுட் நடிகர்களின் வேலைநிறுத்தம் முடிவுக்கு வந்தது
ஹாலிவுட் நடிகர்கள் சங்கம், தயாரிப்பு நிறுவனங்கள் சங்கம் இடையேயான, தற்காலிக ஒப்பந்தம் ஏற்றுக்கொள்ளப்பட்டதை தொடர்ந்து, பல மாதங்களாக நீடித்து வந்த ஹாலிவுட் நடிகர்களின் வேலை நிறுத்தம் முடிவுக்கு வந்தது. தற்காலிக ஒப்பந்தம் ஏற்றுக் கொள்ளப்பட்ட நிலையில், 118 நாட்களாக நடந்து வந்த வேலை நிறுத்தம் நேற்றுடன் முடிவுக்கு வந்தது. ஒப்பந்தம் குறித்த கூடுதல் தகவல்கள் இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. சுமார் 1.6 லட்சம் உறுப்பினர்களை கொண்ட ஹாலிவுட் நடிகர்களின் சங்கமான, ஸ்க்ரீன் ஆக்டர்ஸ் கில்ட்-அமெரிக்கன் ஃபெடரேஷன் ஆஃப் டெலிவிஷன் அண்ட் ரேடியோ ஆர்ட்டிஸ்ட்ஸ்(Sag-Aftra), ஊதிய உயர்வு, செயற்கை நுண்ணறிவால் ஏற்படும் வேலை இழப்பு அபாயங்கள் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த ஜூன் 14ஆம் தேதி அன்று வேலை நிறுத்தத்தை அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
வேலை நிறுத்தத்தால் தாமதமாகும் திரைப்படங்கள்
ஹாலிவுட் நடிகர்கள் நான்கு மாதமாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வந்த நிலையில், பல்வேறு படங்களில் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது. டிஸ்னி/மார்வெல்ஸ் பிளேட், டூன்: பார்ட் 2 மற்றும் பென்டாஸ்டிக் 4 உள்ளிட்ட படங்கள் பல மாதங்கள் தாமதமாகின்றன. அதே சமயம் அவெஞ்சர்ஸ்: காங் டைனசிட்டி மற்றும் அவெஞ்சர்ஸ்: சீக்ரெட் வார்ஸ், மிஷன் இம்பாசிபிள் படத்தின் எட்டாம் பாகம் உள்ளிட்ட படங்களின் ரிலீஸ் தேதிகள் ஒரு வருடத்திற்கு மேல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அவதார் தொடர், பேடிங்டன் இன் பெரு உள்ளிட்ட திரைப்படங்களின் அனிமேஷன் பணிகளும் பாதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.