
உலக நாயகன் பிறந்தநாள்- சினிமாவில் அவர் புகுத்திய புதுமைகளின் ஒரு தொகுப்பு
செய்தி முன்னோட்டம்
தமிழ் சினிமாவின் நடிப்பு சக்கரவர்த்திகளில் ஒருவரான உலகநாயகன் கமலஹாசன், இன்று தனது 69வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார்.
தனது 6 வயதில் களத்தூர் கண்ணம்மா திரைப்படத்தின் மூலம் அறிமுகமான கமல்ஹாசன், ஆறு தசாப்தங்களை கடந்தும் தற்போது நடித்து வருகிறார்.
நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், வசனகர்த்தா என சினிமாவில் இவர் தொடாத துறையே இல்லை. இவை அனைத்திலும் உச்சம் தொட்ட கமல்ஹாசன், தான் சேர்த்த பெரும்பான்மையான பணத்தை சினிமாவில் புதுமையை புகுத்துவதற்காக செலவழித்தார்.
தமிழ் சினிமாவில் இவர் பயன்படுத்திய புதிய தொழில்நுட்பங்களில் பெரும்பான்மையானவை, இந்தியாவிற்கே புதுமையானவை.
அந்த வகையில், சினிமாவில் இவர் பயன்படுத்திய புதிய தொழில்நுட்பங்கள் குறித்த தொகுப்பை இங்கு பார்க்கலாம்.
2nd card
தமிழ் சினிமாவின் முதல் ஒரு கோடி பட்ஜெட் படம்
விக்ரம்- கடந்த 1986 ஆம் ஆண்டு வெளியான விக்ரம் திரைப்படத்தை, தனது ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் மூலம் கமல்ஹாசனே தயாரித்தார்.
தமிழில் முதன் முதலில் ₹1 கோடி பட்ஜெட்டில் உருவான திரைப்படத்தில், அனைத்து பாடல்களும் கணினி கொண்டு ரெக்கார்டிங் செய்யப்பட்டது.
குணா- 1991 ஆம் ஆண்டு வெளியான குணா திரைப்படத்தை, கமல்ஹாசனின் நண்பர் சந்தான பாரதி இயக்க, இப்படத்தையும் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனமே தயாரித்தது.
இத்திரைப்படத்தில் தமிழில் முதல்முறையாக 'ஸ்டெடிகாம்' என்ற தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டது.
தேவர் மகன்- தமிழ் சினிமாவில் மிகப்பெரிய வெற்றி படமாக 1992 ஆம் ஆண்டு வெளியான தேவர்மகன் திரைப்படம் அமைந்தது.
இத்திரைப்படத்திற்கு கமல்ஹாசன் மூவி மேஜிக் என்ற சாப்ட்வேரை கற்று, ஏழு நாட்களில் கதை எழுதி முடித்தார்.
3nd card
டால்பி சவுண்ட் சிஸ்டம் முதல் ஆவிட் சாஃப்ட்வேர் வரை
மகாநதி- தேவர் மகன் வெளியானதற்கு அடுத்த ஆண்டு வெளியான மகாநதி திரைப்படத்திலும், கமலஹாசன் புதிய தொழில்நுட்பத்தை புகுத்தி இருந்தார்.
அவரது கதை, திரைக்கதையில் வெளியான இப்படத்தில் முதல் முறையாக கமல்ஹாசனின் பரிந்துரையில், ஆவிட் என்னும் எடிட்டிங் சாஃப்ட்வேர் பயன்படுத்தப்பட்டது.
குருதிப்புனல்- 1995 ஆம் ஆண்டு வெளியான குருதிப்புனல் படத்தையும் கமல்ஹாசனே தயாரித்தார்.
கமல்ஹாசனின் திரை வரலாற்றில் மாபெரும் வெற்றி படமாக அமைந்த இப்படத்தில், முதல் முறையாக டால்பி சவுண்ட் சிஸ்டம் பயன்படுத்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்தியன்- இயக்குனர் சங்கர், கமல்ஹாசன் கூட்டணியில் 1996 ஆம் ஆண்டு உருவான இந்தியன் திரைப்படத்தில், முதல் முறையாக கிரேஸ்தடிக் மேக்கப் எனும் நுட்பத்தை கமலஹாசன் பயன்படுத்தினார்.
அப்படத்தில் கமல்ஹாசனின் வயதான கதாபாத்திரத்திற்கு, இந்த நுட்பத்தை அவர் பயன்படுத்தியிருந்தார்.
4th card
மோஷன் கிராஃபிக்ஸ் முதல் லைவ் ரெக்கார்டிங் வரை
ஆளவந்தான்- கடந்த 2001 ஆம் ஆண்டு கமலின் இரட்டை வேடத்தில் வெளியான ஆளவந்தான் திரைப்படத்தின் சண்டைக் காட்சிகளுக்கு, மோஷன் கிராஃபிக்ஸ் பயன்படுத்தப்பட்டது.
தமிழில் முதல் முறையாக இதை அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசன் என்பது குறிப்பிடத்தக்கது.
விருமாண்டி- கமல்ஹாசன் தனது சொந்த தயாரிப்பில் இயக்கி, நடித்த விருமாண்டி திரைப்படம் 'கல்ட் கிளாசிக்காக' உயர்ந்து நிற்கிறது.
கடந்த 2004 ஆம் ஆண்டு வெளியான இப்படத்தில், தமிழ் சினிமாவில் முதல் முறையாக லைவ் ரெக்கார்டிங் செய்யப்பட்டது.
மும்பை எக்ஸ்பிரஸ்- கடந்த 2005 ஆம் ஆண்டு வெளியான இத்திரைப்படம், தமிழில் முதல் முதலில் டிஜிட்டல் கேமராவை பயன்படுத்தி படமாக்கப்பட்ட திரைப்படமாகும்.
பிலிம் கேமராவிலிருந்து, டிஜிட்டல் கேமராவிற்கு ரசிகர்களால் திடீரென மாற முடியாததால், இப்படம் சுமாரான வெற்றியை பெற்றது குறிப்பிடத்தக்கது.
5th card
சினிமாவின் நிரந்தர மாணவன் கமலஹாசன்
விஸ்வரூபம்- கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான இப்படத்தின் முதல் பாகத்தில், கமலஹாசன் ஆரோ 3d சவுண்ட் சிஸ்டம் முறையை பயன்படுத்தியிருந்தார்.
தமிழ் சினிமாவுக்குள் பல புதுமைகளை புகுத்திய கமல்ஹாசன், சமீபத்தில் சீனா சென்று புதிய சினிமா தொழில்நுட்பத்தை கற்று வந்ததாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் சமீபத்திய பேட்டியில் கூறியிருந்தார்.
காலங்கள் கரைந்து ஓடினாலும், கமலஹாசன் என்ற கலைஞனுக்குள் இருக்கும் சினிமா தாகம் மட்டும் இன்னும் குறைந்த பாடில்லை.